கனமழையால் மூழ்கிய 4 மாவட்டங்கள்:


திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தாமிரபரணி ஆற்றை ஒட்டிய வடக்கு புறவழிச்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழுத்தளவு மழை நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.


நெல்லையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை  மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை  சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடக்கம் அடைந்துள்ளது.




இச்சூழலில், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.  



பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்:


இந்த நிலையில், தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர்  நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி விரைந்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சருடன் பேச பிரதமர் மோடி நாளை நேரம் ஒதுக்கியுள்ளார்.


இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை (19.12.2023) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 செ.மீ மேல் அதி கன மழை பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதி கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இம்மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தென் மாவட்டங்களில் 37 இடங்களில் அதி கன மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.