கனமழை


கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 செ.மீ மேல் அதி கன மழை பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இம்மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தென் மாவட்டங்களில் 37 இடங்களில் அதி கன மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 







வெள்ளப்பெருக்கில்ல சிக்கி விடிய விடிய தவித்த 20 பக்தர்கள் பத்திரமாக மீட்பு


விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் சென்றனர். மதியம் முதல் தொடர்ந்து விடிய, விடிய பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கோயில் அடிவாரத்துக்கு வருகை தந்த 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓடையை கடக்க முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் இன்று தீயணைப்புத் துறையினர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள், வனத்துறையினர் இணைந்து கயிறு கட்டி 22  பக்தர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் 200- க்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலைப் பகுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.




சாப்டூர் பெரிய கண்மாய் நிரம்பியது.


சதுரகிரி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு - ஒரே நாளில் 190 ஏக்கர் பரப்பளவு கொண்ட சாப்டூர் பெரிய கண்மாய் நிரம்பி மறுகால் சென்று வருகிறது.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான சாப்டூர், சதுரகிரி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சாப்டூர் கேனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாப்டூரில் உள்ள சுமார் 190 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட பெரியகுளம் கண்மாய் ஒரே நாளில் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. கண்மாய் நிரம்பி மறுகால் செல்லும் சூழலில் வரத்தாக வரும் நீர் மற்றும் உபரி நீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர். மேலும் கரையோர பகுதியைச் சேர்ந்த பழையூர், அத்திபட்டி, வண்டப்புலி உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஓடை, ஆறு பகுதிகளை கடக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.