தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் பொன்முடி. இவரின் சகோதரர் டாக்டர். தியாகராஜன் இன்று அதிகாலை காலமானார். அதிகாலை 3:00 மணியளவில் இவரின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறுநீரக சிறப்பு அரசு மருத்துவராக இவர் பணியாற்றி வந்தார். தியாகராஜன் உடல்நல குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் இன்று காலை 7 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


தியாகராஜனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4:30 மணி அளவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் பாண்டி ரோடு காந்தி சிலை எதிரில் மரகதம் மருத்துவமனையில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கப்பட உள்ளது. மருதூர் இடுகாட்டில் நல்லடக்கம் நடைபெற உள்ளது.






இதையடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும், நேரில் சென்று அஞ்சலி செலுத்த இருப்பதாக, தகவல் கிடைத்துள்ளது.


பொன்முடியின் தம்பியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "அமைச்சர் பொன்முடியின் தம்பியான மருத்துவர் க தியாகராஜன் (65) மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன்.


 








உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்." என குறிப்பிடப்பட்டுள்ளது.