சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கிண்டி, மாம்பலம், பல்லாவரம், ஆலந்தூர், தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளான குன்றத்தூர், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மாதாவரம், வண்டலூர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. 


அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு:


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மண நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், கனமழை பாதித்த இடங்களுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சென்று மக்கள் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


மழைநீர் தேங்கியதையடுத்து பெரம்பூர் சுரங்கப்பாதை மூடல்:


சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் தேவையின்றி வெளியேற வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஒரு மணி நேரத்தில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியதையடுத்து பெரம்பூர் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. கெங்குரெட்டி, நுங்கம்பாக்கம், துரைசாமி, அரங்கநாதன் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.






சென்னை மற்றும் புறநக பகுதிகளில் அடுத்த மணி நேரத்துக்கு மிதமானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கனமழையை தொடர்ந்து சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலான 2 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 19 செ.மீ மழை பொழிந்துள்ளது. மேலும், அம்பத்தூரில் 12.6 செ.மீ, திருவிக நகர் 12 செ.மீ, கொளத்தூரில் 6.2 செ.மீ, அம்பத்தூரில் 5.4 செ.மீ, கத்திவாக்கம் 4.6 செ.மீ மழை பொழிந்துள்ளது.


தொடர்ந்து பெய்து வரும் மழையால்  சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. மேலும், வாகனங்கள் சாரை சாரையாக  ஊர்ந்து செல்கின்றன பெரம்பூர், கெங்குரெட்டி, நுங்கம்பாக்கம், துரைசாமி, அரங்கநாதன் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகல் மூடப்பட்டுள்ளன.  இந்த மழை இரவு 10 மணி வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.