டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சாய்பாபா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி சாய்பாபா என முதலமைச்சர் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பேராசிரியர் சாய்பாபாவுக்கு முதல்வர் இரங்கல்:
எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் மறைவு மனித உரிமைச் செயற்பாட்டுச் சமூகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். தனது சுதந்திரமும் உடல்நிலையும் அச்சுறுத்தலில் இருந்தபோதும் கூட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி அவர்.
பல சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர் காட்டிய நெஞ்சுரம் வாய்மைக்கான நிலைத்த அடையாளமாக என்றும் நினைவுகூரப்படும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது அன்புக்குரியோர்க்கும் இந்தக் கடினமான வேளையில் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
பித்தப்பை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஜி.என். சாய்பாபாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு உடல்நிலையில் பாதிக்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு 9 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. கடந்த 20 நாட்களாக நிஜாம் மருத்துவ அறிவியல் கழகத்தில் (நிம்ஸ்) அவர் அனுமதிக்கப்பட்டார்.
மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை, தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக் கூறி கடந்த மார்ச் மாதம், அவரை விடுவித்தது.
இதையும் படிக்க: விஜயின் தளபதியா அல்லது தலைவலியா ? புஸ்ஸி ஆனந்த் செயலால் அதிருப்தி.. கண்டிப்பாரா விஜய் ?