அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மத்தியில் ஆளும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்தான். வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேசுபொருளான ஒரே நாடு ஒரே தேர்தல்:
நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும் என நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது.
மக்களவை, சட்டப்பேரவை தொடங்கி பஞ்சாயத்து வரை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பரிந்துரைகளை வழங்க குழு அமைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பானை வெளியிட்டது.
8 பேர் கொண்ட குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே, மத்திய ஊல் தடுப்பு அமைப்பின் முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி, நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என். கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி. காஷ்யப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு:
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின், காட்டமான விமர்சனத்தை மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், "ஒரே நாடு - ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்த மத்திய பாஜக அரசு அழுத்தம் கொடுத்து வருவது, நமது கூட்டாட்சி அமைப்பைக் குழி தோண்டிப் புதைக்கும் அப்பட்டமான முயற்சியாகும்.
மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவின் அடிப்படை சாரத்திற்கு எதிராக மத்திய அரசிடம் அதிகாரத்தை குவிக்கும் நகர்வாகும்.
இந்த திடீர் அறிவிப்பும், அதைத் தொடர்ந்து உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டதும் பல சந்தேகங்களைத் தூண்டுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சர்வாதிகாரத்திற்கு இட்டு செல்லும் வழியே தவிர ஜனநாயகத்திற்கு இட்டு செல்லாது" என குறிப்பிட்டுள்ளார்.