நீட் தேர்வால் பயனில்லை என்பதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நீட் இளநிலை தேர்வில் (Neet UG) தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


நீட் தேர்வு:


அதன்படி, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான 2023-24 தேர்வு கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் மார்ச் 14ஆம் தேதி வெளியானது. இந்தத் தேர்வை என்.பி.இ. எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்தியது. பொதுவாக நீட் முதுநிலை தேர்வு 800 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.


அதில்,  பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு (EWS) 291 மதிப்பெண்ணும், பொதுப் பிரிவினரில் மாற்றுத் திறனாளிகளுக்கு 274 மதிப்பெண்ணும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளிகள் உட்பட) 257 மதிப்பெண் என்று நிர்ணயிக்கப்பட்டது.


புதிய அறிவிப்பு:


இந்த சூழலில், நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிபெண் (Cut Off Percentile)  பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோ(0) எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மருத்துவ மாணவர்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் நீட்  தேர்வு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில், தற்போது முதுநிலை மருத்துவ படிப்புக்கான  தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கோடி கணக்கில் செலவு ஆவதாகவும் இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தகுதி மதிபெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டது பணக்கார மாணவர்களுக்கே பயன் அளிக்கும் எனக் கூறப்படுகிறது.


இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நீட் தேர்வால் பயனில்லை என்பதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.


பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்:


இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அவர் குறிப்பிடுகையில், "நீட் முதுநிலை மருத்துவ படிப்பில் கட்-ஆஃப்-ஐ பூஜ்ஜியமாகக் குறைப்பதன் மூலம், நீட் தேர்வின் தகுதி அர்த்தமற்றது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். தேர்வுக்காக பணம் கொடுத்துவிட்டு பயற்சி மையங்களில் சேர்வதாக மருத்துவ படிப்பு ஆகிவிட்டது. தகுதி தேவையில்லை.


நீட் = பூஜ்யம். நீட் தேர்வுக்கும் தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது. உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் இல்லை. விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மத்திய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. நீட் என்ற உயிர் வாங்கும் இயந்திரம் மூலம் உயிர்களை பறித்ததற்காக பாஜக அரசை அகற்ற வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.