நாட்டின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். இவர் பிரதமாக இருந்த போதுதான், காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைக்கப்பட்டது. உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணாவின் பெயரையும் சூட்டினார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி.மண்டல் தலைமையில் கமிஷன் அமைத்து, 2-வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால், அரசு பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்தினார்.


வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழக அரசின் சார்பில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அவரது சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடக்கிறது.


இந்த நிலையில், ஆட்சியே பறிபோனாலும் சமூகநீதிக் கொள்கையில் இருந்து பின்வாங்காதவர் வி.பி. சிங் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் 4ஆவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. 


இதில், காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா. நோயால் உடலும் உள்ளமும் துவண்டு போகும் ஏழைகளுக்கு உரிய சிகிச்சை கொடுத்து, அவர்களைக் குணப்படுத்தி, அவர்களின் முகத்தில் புன்னகையை வர வைப்பவர்கள் – மருத்துவர்கள்!


உயிர்களைக் காப்பாற்றுவது என்பது, உங்களின் தொழில் மட்டுமல்ல; சமுதாயத்திற்கு நீங்கள் செய்கிற சேவை! அப்படிப்பட்ட சமுதாயத்தில் சமத்துவம் நிலவ வேண்டும். சமத்துவம் இல்லை என்றால், அது ஆரோக்கியமான சமுதாயமாக இருக்க முடியாது. பிறப்பு மற்றும் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளால் சமுதாயத்தின் சமத்துவம் சீர்குலைந்து நோய்வாய்ப்பட்டிருந்தால், அதற்குத் தேவையான சிகிச்சைதான், சமூகநீதி! 


புரட்சியாளர் அம்பேத்கர், அந்தச் சமூக சிகிச்சையை, அரசியல் சட்டத்தின் மூலமாகக் கொடுத்தார். நம்முடைய தமிழ்நாட்டில் அந்தச் சிகிச்சையை மேற்கொண்டவர்களில் முக்கியமானவர்கள் மருத்துவர்கள். முறையாக மருத்துவம் படித்து மக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் நடேசனாரும், டாக்டர் டி.எம்.நாயரும் பிட்டி.தியாகராயருடன் இணைந்து நீதிக்கட்சி என்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்கி, சமூகநீதி என்ற சிறப்பான சிகிச்சையை சமுதாயத்திற்குத் தந்தார்கள். அந்த சிகிச்சையைப் பனகல் அரசர் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்.


தந்தை பெரியார் அந்தச் சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றினார். நெடுங்காலமாகச் செல்லரித்துப் போயிருந்த பகுதிகளைப் பெரியார் அகற்றினார். புதிய ரத்த அணுக்கள் உருவாகிற வகையிலான சிகிச்சையைப் அண்ணா வகுத்தளித்தார். அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, நோயற்ற நலமான சமூகத்தைப் படைத்தார் கருணாநிதி.


தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவிற்கே சமூகநீதி சிகிச்சையை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மூலம் கிடைக்கச் செய்தவர் கருணாநிதி. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் ‘இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு‘ சமூகநீதி என்ற சிகிச்சையை வழங்கியவர் வி.பி.சிங். 


தன்னுடைய ஆட்சியே பறிபோனாலும் சமூகநீதிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக நின்ற அந்தப் பெருமகனாரைப் போற்றுகிற வகையில் அவரின் திருவுருவச் சிலையை இந்தியாவிலேயே முதன்முறையாக நம்முடைய தமிழ்நாட்டின் தலைநகரான இந்தச் சென்னையில் நாளை திறந்து வைக்கப் போகிறோம்" என்றார்.