மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இந்த நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினரின் ஜனநாயக உரிமையை பறிப்பதாகும்; இது முற்போக்கு ஜனநாயக சக்திகளின் மீதான தாக்குதல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி குடும்பபெயர் குறித்து ராகுல்காந்தி அவதூறாக பேசிய வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, ராகுல் காந்தியை மக்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.


ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் 


ராகுல்காந்தி  மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல்  என்று தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அரசியல் கட்சியின் பெருந்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை என்பது கிடையாது என்று மிரட்டும் தொனியில் இருக்கிறது இந்த நடவடிக்கை என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.


ராகுல் காந்தி அவர்கள் பேசிய கருத்து அவதூறானது என்ற அடிப்படையில் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை தரப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை விதித்த நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா , இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காகக் கால அவகாசத்தை ராகுல் காந்தி அவர்களுக்கு வழங்கி இருக்கிறார். 'வழக்கை மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தீர்ப்பை அமல்படுத்துவதற்கு 30 நாட்கள் தடை விதிக்கிறேன்' என்றும் சொல்லி இருக்கிறார்.


மேல்முறையீடு செய்வது என்பது தண்டனை பெற்ற எவருக்கும் உள்ள அடிப்படை உரிமை ஆகும். அதனைத் தனது தீர்ப்பிலேயே நீதிபதி சுட்டிக்காட்டி 30 நாட்கள் வழங்கி இருக்கிறார். அதற்குள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது ஆகும். 2 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திவிடவில்லை. மாவட்ட நீதிமன்றம்தான் தீர்ப்பு தந்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு இருக்கிறது. இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டியது உச்சநீதிமன்றம் ஆகும். இதற்காகவே காத்திருந்ததைப் போல 23-ஆம் தேதி தீர்ப்பு, 24-ஆம் தேதி பதவிப் பறிப்பு என்று நடவடிக்கை எடுத்துள்ளது அரசு. இது ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல என்று தெரிவித்துள்ளார்.




மேலும் வாசிக்க..


Ajith: தந்தையை இழந்து தவிக்கும் அஜித்... தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


Akasa Air: அடுத்தாண்டுக்குள் 1000 பேருக்கு வேலை - ஆகாச ஏர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு