திராவிட நாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா? என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அமைச்சர் பொன்முடி எழுதியுள்ள ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ நூல் வெளியீட்டு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.


அப்போது, பொன்முடிக்கு புகழாரம் சூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், "கலைஞரால் பட்டிதீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் தனது செயல்பாடுகளால் மின்னுகிறார். ஆழ்கடலில் கண்டெடுத்த நன்முத்து பென்முடி. அறிவுமுடிதான் பொன்முடி" என்றார். 


"நாக்கு தீட்டாகி விடுமா?"


தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர், "திராவிடம் என்பது ஆரியத்தை பதம் பார்க்கும் சொல். திராவிட நல் திருநாடு என சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகி விடுமா? இப்படி பாடினால் சிலருக்கு வாயும் வயிறும் எரியும் என்றால் அதை திரும்ப திரும்ப பாடுவோம்" என கடுமையாக எதிர்வினையாற்றினார்.


விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, "அமெரிக்காவின் கருப்பின போராட்டத்தை விட வீரியமான வரலாறு கொண்டது திராவிட இயக்கம். தோல் மூலம் கண்ணுக்கு தெரிகிற நிறவெறியைவிட, கண்ணுக்கே தெரியாத சாதிவெறி கொடுமையானது" என்றார்.


பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், "திராவிடநல் திருநாடு என்பதை எடுக்கிறார்கள். திராவிடர்கள் என்றால் கேவலமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரம்:


சமீபத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றார்.


நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் பாடப்பட்ட தேசிய கீதத்தில் 'திராவிடம்' என்று வரும் வரியை பாடிய போதிலும், தமிழ் தாய் வாழ்த்தில் வரும் வரி புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.


இதையும் படிக்க: https://tamil.abplive.com/news/india/abp-network-the-southern-rising-summit-2024-at-hyderabad-telangana-cm-revanth-reddy-slams-pm-modi-205056/amp