பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


1970 மற்றும் 1980 காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீபிரியா. இவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,இந்தி என பல மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதேபோல் இயக்குநராக தமிழ், தெலுங்கு ,கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். 


 






டப்பிங் ஆர்டிஸ்ட், சின்னத்திரை சீரியல்கள் என அனைத்து துறைகளிலும் நுழைந்து ரசிகர்களிடம் மறக்க முடியாத இடத்தை ஸ்ரீபிரியா பெற்றுள்ளார். மேலும் கமலுடன் 28 படங்கள், ரஜினியும் 30 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு நாகார்ஜுன் என்ற மகனும் சிநேகா என்ற மகளும் இருக்கிறார்கள்.

இதில் மகள் சிநேகாவுக்கு அண்மையில் லண்டனில் திருமணம் நடைபெற்றது. அதேசமயம் ஸ்ரீபிரியா நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பிலும் உள்ளார். இந்நிலையில் தான் ஸ்ரீபிரியாவின் தாயார் குடந்தை கிரிஜா பக்கிரிசாமி வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரான காரைக்கால் நடேசன் பக்கிரிசாமி பிள்ளையின் மனைவி தான் கிரிஜா பக்கிரிசாமி ஆவார். இவர் காதோடு தான் பேசுவேன் என்ற படத்தை இயக்கியுள்ளதோடு, நீயா உள்ளிட்ட படங்களை தயாரித்தும் உள்ளார். 


கிரிஜாவின் இறுதிச்சடங்கு இன்று மாலை மயிலாப்பூரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.