ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மீனவர்களுக்கான 10 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த 10 அறிவிப்புகள் மூலம் 2,77,347 மீனவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதற்காக சுமார் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மேலும் சில கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 அறிவிப்புகள் என்னென்ன?
- மீனவர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 5035 பேருக்கு பட்டா வழங்கப்பட்டும்
- 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவு கடன் வழங்கப்படும்.
- மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை, 8000 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 1,79,000 பேர் இதில் பயன்பெறுவார்கள். அதோடு 60 வயதுக்கு மேற்பட்ட 15 ஆயிரம் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும்.
- 1000 நாட்டு படகு மீனவர்களுக்கு 40 % மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்
- தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட நாட்டு படகு உரிமையாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு 3700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்
- மானிய விலையில் வழங்கப்படும் டீசல் அளவு உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், விசைப்படகுகளுக்கு 18,000 லிட்டரிலிருந்து 19,000 லிட்டராகவும், இயந்திரம் பொறுத்தப்பட்ட நாட்டு படகுகளுக்கு 4000 முதல் 4400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும்
- தங்கச்சி மடம் மீன்பிடி துறைமுகம் அமைதற்கான ஆய்வு மேற்கொள்ளும் பணி தொடங்கப்படும். குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வலை அமைக்கும் பணிக்கான ஆய்வுகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- மீனவர்கள் விபத்து காப்பிடு திட்டத்தின் கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீன்பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவர்களுக்கு சுழல் நிதி 25 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது
- மீனவர்களுக்கான வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அலகு நிதி 1,70,000 ரூபாயிலிருந்து 2,40,000 ரூபாயாக வழங்கப்படுகிறது.
- மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு மற்றும் படகுகளில் பாதுகாப்பை உறுதி செய்யு தூண்டில் வலை அமைக்க கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு இருப்பதால் நிறைவேற்ற முடியாத நிலை இருந்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
தொடர்ந்து பேசிய அவர், “ 2014 தேர்தலுக்கு முன்னர் பாம்பனின் கடல் தாமரை என்ற போராட்டம் நடத்தப்பட்டது. அதில் மறைந்த சுஷ்மா சுவராஜ் கலந்துக்கொண்டார். அப்போது பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சதீவு மீட்கப்படும் என தெரிவித்தார், ஆனால் தற்போது வரை அது நடக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிதமர் மோடி பேசுகையில், தமிழ்நாடு மீனவர்களின் இந்த நிலைக்கு காங்கிரஸ் அரசு தான் காரணம் என குறிப்பிட்டார். பாஜக ஆட்சியில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லையா? ஒரு மீனவர்கள் கூட உயிரிழக்க மாட்டார் என கூறினார், 2017 ஆம் ஆண்டு தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் அரசு தரப்பில் கடிதம் எழுதிய பின் தான் மத்திய அரசு ஏதோ ஒரு நடவடிக்கை எடுக்கிறது.
2020 ஆம் ஆண்டு முதல் 48 முறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 619 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 83 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் 604 மீனவர்கள் மற்றும் 16 படகுகளை மட்டுமே இலங்கை அரசு விடுவித்துள்ளது. இந்த ஆண்டும் 74 மீனவர்களை இலங்கை அரசு கைது செய்துள்ளது. 59 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியிலும் தாக்குதல் நடைபெறுகிறது என்றால் மோடி அரசு பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். மீனவர்களின் பிரச்சனைக்கான ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பது தான். அந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு எப்போதும் முன்வைத்து வருகிறது. ஆனால் இதற்கு காரணம் திமுக ஆட்சி தான் என வரலாறு தெரியாத சிலர் உளறி வருகிறார்கள். கச்சதீவை தரக்கூடாது என சொன்னதே கலைஞர் தான், அதனை அவர்தான் வலியுறுத்தினார்” என குறிப்பிட்டு பேசினார்.