சென்னை, ஓமந்தூரரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அவரது சிலையின் கீழ் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளது. அவை பின்வருமாறு :


வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம். 
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.


இவை அனைத்தும் கருணாநிதியின் பொன்மொழிகள் ஆகும். இதையடுத்து, சென்னை, கலைவாணர் அரங்கில் விழா நடைபெற்று வருகிறது.


இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார். அப்பொழுது பேசிய அவர், "அன்புள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி திருவுருவ சிலையை திறந்து வைத்த மாண்புமிகு இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அவர்களை வரவேற்கிறேன். வாழ்வில் ஓர் பொன்னாள் என்று எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. தமிழ்நாட்டை, இந்த தமிழ் இனத்தை, இந்த தமிழ் நிலத்தை வானுயுரத்திற்கு உயர்த்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நம்முடைய நன்றியின் அடையாளமாக தமிழின தலைவருக்கு இந்த சிலை எழுப்பப்பட்டுள்ளது. 






தமிழ்நாட்டில் நிலையை உயர்த்த பாடுபட்டவர் என்பதால்தான் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இவருக்கு தமிழ்நாடு முழுவதும் சிலை எழுப்பப்பட்டு வருகிறது. இன்று எழுப்பப்பட்ட சிலைக்கு என்ன சிறப்பு என்று கேட்டால் தந்தை பெரியாருக்கும், பேரறிஞர் அண்ணாவுக்கு இடையில் நம்முடைய கலைஞர் சிலை அமைந்துள்ளது. 


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் எழுப்பப்பட்டதுதான் இந்த ஓமந்தூரரார் கட்டடம். தமிழ்நாடு சட்டபேரவைக்காக கட்டப்பட்டதுதான் இந்த கட்டடம். தற்போது மருத்துவமனையாக செயல்பட்டு வந்தாலும், அது கலைஞரின் கனவு கோட்டையாகவே இருந்து வருகிறது. அதற்காகதான் அவரது சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. 


நட்புக்குரிய இனிய நண்பராகதான் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு எப்போதும் இருந்து வருகிறார். கலைஞர் சிலையை திறக்க யாரை அழைக்கலாம் என்று நாங்கள் நினைத்த நேரத்தில் வெங்கய்யா நாயுடு முகம் தான் எங்களது நெஞ்சில் எழுந்தது. அவரை நேரில் சென்று அழைத்தபோது மனபூர்வமாக ஒப்பு கொண்டார். நாட்டில் பல குடியரசுத் தலைவர்கள், பிரதமர்களை உருவாக்கியவர் கலைஞர். இந்தியாவின் நிலையான ஆட்சி இருப்பதற்கு காரணமாக இருந்தவரும் முத்தமிழறிஞர் கலைஞர்தான். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து இன்று காணும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கலைஞர் ; அதற்கான தொலைநோக்கு பார்வை அவரிடம் இருந்தது. தமிழ்நாட்டில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலாக கலைஞர் விளங்கினார்.கலைஞர் கருணாநிதியின் திட்டங்களால் உருவானதுதான் இந்த நவீன தமிழ்நாடு. அதனால்தான் அவரை #FatherofModernTamilnadu நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று புகழ்கிறோம் அத்தகைய மாமனிதருக்குதான் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 


கலைஞர் அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். திரைத்துறைக்கு வருபவர்கள் கலைஞரின் வசனத்தை பேசி உள்ளே நுழைவார்கள் என்பது நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நன்கு தெரியும்" என்று குறிப்பிட்டுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண