குற்றங்களைத் தடுப்பதே இந்த அரசின் முக்கிய இலக்கு என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆட்சியை ஒப்பிடும்போது காவல் நிலைய மரணங்கள் குறைந்துள்ளது. முற்றிலுமாக இல்லாத அளவிற்கு நடவடிக்கையை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், “குற்றங்களைத் தடுப்பதே இந்த அரசின் முக்கிய இலக்கு. அதையும் மீறி அங்கும் இங்குமாக ஓரிரு இடங்களில் நடைபெறக்கூடிய குற்றங்களிலும் வழக்கமாக நடைபெறும் குற்றச் சம்பவங்களிலும் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தீவிரவாத - மதவாத - தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கண்காணித்தும், மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்தும், கடலோர மாவட்டங்களில் சோதனைகளை தீவிரப்படுத்தியும், மலைப்பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி தீவிர சோதனைகள் நடத்தியும், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு காவல் துறை நுண்ணறிவுப் பிரிவின் ஒரு அங்கமாக விளங்கும் சிறப்புப் பிரிவின் நுண்ணறிவுத் தகவல்களின்படி விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் மூலம் மதரீதியான மோதல்கள் எதுவுமின்றி தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாகச் செயல்பட்டுவருவது குறித்து, புள்ளிவிவரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தாக்கலான: 182 ஆதாயக்கொலை வழக்குகளில் 171 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 194 கொலை வழக்குகளில் 3 ஆயிரத்து 144 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 252 கூட்டுக் கொள்ளை வழக்குகளில் 242 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்து 281 கொள்ளை வழக்குகளில் 4 ஆயிரத்து 240 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 874 வன்புணர்வு வழக்குகளில் 849 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 90 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில், 75 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 9 ஆயிரத்து 440 போக்சோ வழக்குகளில். 9 ஆயிரத்து 340 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த அரசின் விழிப்புணர்வு பிரச்சாரங்களால் குற்றம் நடைபெற்றவுடன் புகார் கொடுக்க மக்கள் முன் வருகிறார்கள். காவல் நிலையங்களில் "வரவேற்பாளர்" நியமனம், காவல்துறையின் மனிதநேய அணுகுமுறை போன்றவற்றால் பதிவு செய்யப்படும் வழக்குகள் ஒரு சில குற்றங்களில் அதிகரிக்கலாம். அதற்கு காரணம், புகார்கள் வரும்பொழுது, கடந்த ஆட்சியில் இழுத்தடித்ததுபோல் இல்லாமல், இப்போது உடனடியாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அப்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மூடி வைக்காமல் உடனடியாக விசாரித்து குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்படுகிறார்கள், எதிரிகள் கைது செய்யப்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் மேற்கண்ட புள்ளிவிவரங்கள்” என பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “நேற்று மாண்புமிகு உறுப்பினர்களின் பேசும்போது, ஆருத்ரா போன்ற நிதிநிறுவனங்களின் மோசடிகள் பற்றிக் குறிப்பிட்டு பேசினார்கள். நான் நேற்றே இதுகுறித்து விளக்கமாக பதிலளித்து இருக்கிறேன். இருந்தாலும் ஒன்றை மட்டும் அழுத்தம் திருத்தமாக இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். மக்களிடம் ஆசையைத் தூண்டி இதுபோன்ற நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இத்தகைய நிதி நிறுவனங்கள் அனைத்தையும் கண்காணிக்குமாறு காவல்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இத்தகைய நிதி நிறுவனங்களின் மோசடிகளைத் தடுக்க முதன்முதலில் சட்டம் கொண்டு வந்ததும், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்பதைக் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். மேலும், இதுபோன்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது பொதுமக்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.