சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினர்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம் கடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மோதல் முற்றியது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தொடர்ந்து கடந்த சட்டப்பேரவையிலும் உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமனம் செய்யவும், ஓபிஎஸ் இருக்கையை அவருக்கு ஒதுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பலமுறை சட்டப்பேரவை அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அப்பாவுவை பல முறை சந்தித்து பேசினர். ஆனால் இதுவரை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தான் அமர்ந்திருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் அதிமுக வெளிநடப்பு செய்திருந்தது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் அங்கீகரித்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக பேசினர். இன்றுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.