சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த காயராம்பேடு பகுதியில் ராதாகிருஷ்ணன் (வயது-41) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், சமீப நாட்களாக இவர் தங்கியிருந்த வீட்டில் மர்ம நபர்கள் சுவர் ஏறிக் குதித்து வந்து போன தடம் பதிவாகியிருந்தது. இதனால் திருடர்களாக இருக்கக்கூடும் என்று கருதிய ராதாகிருஷ்ணன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதனை பார்த்த ராதாகிருஷ்ணனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரும், செங்கல்பட்டு அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவரான கனகசபாபதி மற்றும் அவரது மனைவி கீதா ஆகிய இருவரும் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து படுக்கையறையை ஒட்டுக் கேட்பது கழிவறையை எட்டிப் பார்ப்பது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கனகசபாபதியிடம் கேட்ட போது தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. உடனே ராதாகிருஷ்ணன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கனகசபாபதி மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர் படுக்கையறையை ஒட்டுக் கேட்பது, கழிவறையை எட்டிப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. அதன் அடிப்படையில், போலீசார் இருவர் மீதும் ஐபிசி செக்சன் 294(b) மற்றும் 506(11) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புகார் அளித்துள்ளனர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இரண்டு தரப்பில் இருந்தும் கூறப்படும் தகவல்களின் உண்மை தன்மையை விசாரணை செய்து வருவதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்களின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில் , வீட்டில் குடியிருப்பவர்கள் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காத காரணத்தினாலே இவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தரப்பியும் காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், பழிவாங்கும் நோக்குடன் இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறதா? என்று கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்