"இது குளம் மட்டுமல்ல கலைஞர் சொன்ன பாடம்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்திற்கு சென்றதை பற்றி குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்கு இரண்டு நாள் பயணமாக நேற்று திருவாரூர் பயணம் மேற்கொண்டார். இன்று (பிப்-22இல்) நடைபெற இருக்கும் திமுக நிர்வாகியின் இல்லதிருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமை ஏற்கிறார்.
இதனையடுத்து திருவாரூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார். முதல்வரின் இந்த பயணத்தை முன்னிட்டு திருவாரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று மாலை திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தை சென்று பார்வையிட்டார். அந்த குளத்தை பார்வையிட்டபோது மிகவும் மகிழ்ந்ததாகவும், சிறு வயது நினைவுகள் வந்ததாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர். (1/2)