சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


அரசின் முன்னெடுப்பு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கடந்த 9 மற்றும் 13ம் தேதி முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் எனும் தலைப்பில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், சிறப்புத் திட்ட செயலாக்க துறையின் செயல்பாடுகள் மற்றும் வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து நடத்தப்பட்டது.


இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், எரிசக்தி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள், போக்குவரத்து, சிறப்பு முயற்சிகள், பொதுப்பணி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம், கைத்தறி, கைத்திறன், உள்ளிட்ட பல்வேறு   துறைகளைச் சார்ந்த நடைமுறையில் உள்ள 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், 6 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை , ஏற்கனவே நடைமுறை உள்ள திட்டங்களின் முன்னேற்றங்கள். உள்ளிட்டவை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறைசார்ந்த  ஐஏஎஸ் அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் உயர் அலுவர்கள் பங்கேற்றனர்.