சென்னையில் 1000 வை-ஃபை ஹாட்ஸ்பாட் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட் துறை சார்பில் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு (23, 24) இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.


இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல் போன்ற துறைகளில் மொழியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள, செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, ஆங்கிலம் அல்லாத மொழியில் ஒரு தொழில்நுட்ப மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியினுடைய தனித்தன்மை!


எல்காட்டில் அனுமதி வழிமுறைகளை மேம்படுத்தியதால் 5G அலைக்கற்றை நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்தியிருக்கிறோம். தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகத்தை அறிமுகப்படுத்தியது. சென்ற ஆண்டு செய்த சாதனைகளில் முக்கியமான ஒன்று!  நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த தமிழ்நாடு ஃபைபர்நெட் அமைப்பை விரைவுபடுத்தியிருக்கிறோம். நான் முதல்வன் திட்டத்தின்கீழ், ஐசிடி வழியாக நடத்தப்படுகின்ற பயிற்சித் திட்டங்களை அதிகரித்திருக்கிறோம்.


தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக 36 துறைகளின் 751 திட்டங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 38 ஆயிரத்து 292 இ-சேவை மையங்களில், 25 ஆயிரத்து 726 மையங்கள் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டிருக்கிறது!


இது ஒரு டிஜிட்டல் புரட்சி” இல்லையா? சென்னையில் ஆயிரம் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு, சென்னையில் மட்டும், 11 மில்லியன் சதுர அடி அளவிலான புதிய அலுவலகங்கள் குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே, இந்தத் துறை எப்படிப்பட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்” என குறிப்பிட்டுள்ளார்.