திமுகவுக்கும், இன்பத் தமிழ்நாட்டுக்கும் தொண்டினை தொடர்ந்திடுவேன் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு தனது பிறந்தநாள் மடலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம், இந்தியாவின் பன்முகத் தன்மையை காப்பாற்றுவோம் என பிறந்தநாள் செய்தி என தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பிறந்தநாள் மடலில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பிறந்தநாள் மடல்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை முடித்துத் திரும்பிய நிலையில், அங்கு மக்களிடமிருந்து பெற்ற உளப்பூர்வமான உற்சாக வரவேற்பில் கிடைத்த மகிழ்ச்சியுடன் இதனை எழுதுகிறேன். தேர்தல் பரப்புரையின் கடைசி நாளில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் அன்புச் சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு ஒருநாள் பரப்புரை செய்யும் திட்டத்துடன் ஈரோட்டுக்குப் பயணமானேன்.
முதல்நாள் இரவில் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கி, ஈரோட்டினை அடையும்போது ஏறத்தாழ இரவு 10.30 மணியாகிவிட்டது. தேர்தல் விதிமுறைகளினால் அந்த நேரத்தில் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்றாலும், மக்கள் திரண்டு நின்று அன்பைப் பொழிந்தனர். பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் நின்று வாழ்த்தினர். ஆண் ஒருவர் தன் குழந்தையுடன் நின்றார். என்னுடைய வாகனத்தின் வேகம் குறைவதைக் கண்டவுடன் ஆவலுடன் ஓடிவந்து, தன் பெண் குழந்தையின் கையில் ஓர் உணவுப் பொட்டலத்தைக் கொடுத்து, என்னிடத் தரச் சொன்னார்.
சென்னையில் பணிகளை முடித்துவிட்டு, கோவை வந்து, அங்கிருந்து ஈரோடு பயணிப்பதால், தொடர்ச்சியான பணிகளுக்கிடையே நான் சாப்பிட்டிருப்பேனோ இல்லையோ என்ற நினைப்பில், fried rice வாங்கிவைத்து, அதைத் தன் மகள் கையால் கொடுக்கச் செய்த அந்தத் தமிழரின் அன்பினில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வைக் கண்டேன்!
அவருடைய பெண் குழந்தை என்னிடம் உணவுப் பொட்டலத்தைத் தந்ததுடன், “Advance Happy Birthday தாத்தா” என்று வாழ்த்துகளைப் பகிர்ந்த போது நெகிழ்ந்து போனேன். அப்போது அங்கே கூடியிருந்த பெண்களும் குழந்தைகளும் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவித்து மகிழ்ந்தனர். என்னுடைய பிறந்தநாளை மக்களின் வாழ்த்துகளால் நினைவுபடுத்திக்கொண்டபோது உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுத்தது.
1953 மார்ச் 1. உலகம் எப்போதும் போல உதயசூரியனின் ஒளிக்கதிர்களுடன் விடிந்தது. அன்னையார் தயாளு அம்மாளுக்கு அன்று சிறப்பான நாள். அவர் தன்னுடைய இரண்டாவது ஆண் குழந்தையை ஈன்றெடுத்திருந்தார். தாய்மையின் அரவணைப்பில் உலகைக் கண்ட அந்தக் குழந்தை, உங்களில் ஒருவனான நான்தான்.
தந்தை, கழகத்தின் முன்னணித் தலைவர். பொதுவாழ்க்கைக்கு முதலிடம். இல்வாழ்க்கை இராண்டாவதாகத்தான் என்று வாழ்வியலை அமைத்துக் கொண்டவர். சோவியத் யூனியன் எனும் வல்லரசின் அதிபராக - உலகத்தின் கவனத்தை ஈர்த்த தலைவர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள் மறைவெய்தியதையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் தலைவர் கலைஞர் பங்கேற்றிருக்கிறார். மகன் பிறந்த விவரம் ஒரு சிறிய தாளில் எழுதித் தரப்படுகிறது. அதனைப் படித்தவர், தன் மகனுக்கு ஸ்டாலின் எனப் பெயர் சூட்டுவதாக அந்த மேடையிலேயே அறிவிக்கிறார்.
உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உருவானது, பொதுவாழ்க்கைக்கான மேடையில்தான். அதனால், சிறு வயது முதலே பொதுவாழ்வையே முதன்மையாக்கிக் கொண்டேன். கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பைத் தொடங்கி, என் பொதுவாழ்க்கையின் பயணத்தைத் தொடர்ந்தேன். கழகத் தலைவரின் மகன், தமிழ்நாட்டு முதலமைச்சரின் மகன் என்ற அடையாளத்தைப் பின் தள்ளி, இயக்கத்தின் தொண்டன் என்ற முறையிலேயே என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணித்தது.
'பொதுவாழ்க்கை என்பது பொழுதுபோக்குக்கான பூங்கா அல்ல; அது ஓய்வில்லாத போர்க்களம்!' என்பதைத் தலைவர் கலைஞர் அவர்களின் பேச்சுகளாலும் எழுத்துகளாலும் அவரது செயல்களாலும் அப்போதே உணர்ந்துகொண்டேன். அவர் தந்தை பெரியாரிடமும் பேரறிஞர் அண்ணாவிடமும் அதனைப் பயின்றிருந்தார்.
தன்னலம் கருதாமல் - நன்றியை எதிர்பாராமல் - பதவிப் பொறுப்புகளுக்கு வராமல் - வசவுகளையும் விமர்சனங்களையும் மட்டுமே சந்தித்து - கல்லடியையும் சொல்லடியையும் கணக்கின்றி எதிர்கொண்டு திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமூகநீதியை - சுயமரியாதையை - பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்புரை செய்தவர் அறிவாசான் தந்தை பெரியார். அவரிடம் பயின்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் பொதுவாழ்க்கை என்பது பஞ்சு மெத்தை அல்ல, முள் படுக்கை என்பதை உணர்ந்தவர். ஆனாலும், திராவிட சமுதாயத்தை - தமிழ் மொழியை - தமிழினத்தை - தமிழ்நிலத்தை மேம்படுத்த அந்த முள்படுக்கையானப் பொதுவாழ்க்கையையே அவர் தேர்வு செய்ததுடன், தன் தம்பிகளையும், “மக்களிடம் செல்.. மக்களுடன் பழகு… மக்களுக்காக உழைத்திடு” என்று வலியுறுத்தியவர்.
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் கழகத்தின் உடன்பிறப்பாக, மக்களுக்கான தொண்டனாக, உங்களில் ஒருவனாக என் பொதுவாழ்வுப் பணியை மேற்கொண்டு வருகிறேன். நெருக்கடிநிலைக் கால மிசா சிறைவாசமும் சித்திரவதைகளும் எனக்கு வெறும் தழும்புகளல்ல; பொதுவாழ்க்கையில் முதன்முதலாக கிடைத்த பரிசுகள் - பதக்கங்கள்! இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு என்பது பதவியல்ல; கழகம் எனக்குத் தந்த பாடத்திட்டம்! அதனை நல்ல முறையில் தொடர்ந்து பயின்று, தலைவர் கலைஞர் வைத்த தேர்வுகள் அனைத்திலும் வெற்றி பெற்றேன்.
பகுதி பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர் எனக் கழகத்திற்காகத் தொடர்ந்து உழைத்து, படிப்படியாக உயர்ந்து, கழகத் துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என வளர்ந்து, கழகத் தலைவர் என்ற பொறுப்பினை உங்கள் அன்பாலும் ஆதரவாலும் சுமந்திருக்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர், இரண்டாவது முறையும் மக்கள் வெற்றி பெறச் செய்த மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், மூன்று முறை கொளத்தூர் தொகுயில் சட்டமன்ற உறுப்பினர் என மொத்தம் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினர் எனப் பயணத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவால் முதலமைச்சர் என்ற பொறுப்பினை வகிக்கிறேன்.
கட்சிப் பொறுப்பாக இருந்தாலும், ஆட்சிப் பொறுப்பாக இருந்தாலும் உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு.. என்பதையே எனது செயல்திட்டமாகக் கொண்டுள்ளேன். அதுதான் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட விலைமதிப்பில்லாத சொத்து. தலைவர் அவர்களிடமிருந்து பெற்ற பாராட்டுப் பத்திரம்.
அந்த உழைப்பை இப்போதும் தொடர்கிறேன். என் சக்திக்கு மீறி உழைப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறுவது இடைத்தேர்தல்தான் என்றாலும், அது கழகத்தின் திராவிட மாடல் ஆட்சி பற்றி மதிப்பீட்டிற்கான எடைத் தேர்தல் என்பதால் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளருக்கு மகத்தான வெற்றியை உறுதி செய்திடும் வகையில் உழைப்பு தொடர்ந்தது.
கழகத்தின் ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குள் அடங்கிய ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதியின் பகுதி, வட்ட, பாக நிர்வாகிகள் அனைவரும் முழு மூச்சுடன் உழைப்பதை ஒவ்வொரு நாளும் உறுதி செய்து கொண்டேன். ஈரோடு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான திரு. முத்துசாமி அவர்களின் மேற்பார்வையில், கழகத்தின் அமைச்சர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், ஒன்றிய - நகர - பேரூர்க் கழக நிர்வாகிகள் எனப் பலரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியாற்ற நியமிக்கப்பட்ட நிலையில், அவர்களின் அயராத உழைப்புடன், நியமிக்கப்படாத நிர்வாகிகளும்கூட ஆர்வத்துடன் வந்திருந்து, இது எங்களின் கழகத்திற்கு நாங்கள் செய்கிற பணி என்று உரிமையுடன் களப்பணியாற்றிய செய்திகளை அறிந்து மகிழ்ந்தேன்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பாக முகவர்களிடமும் - பகுதி மற்றும் வட்டச் செயலாளர்களுடனும் இரவு நேரத்தில் அலைபேசியில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால், ஒவ்வொரு பாக முகவரும் என் அழைப்பைக் கேட்டதும் உற்சாகம் பெற்று, களநிலவரம் பற்றி நம்பிக்கையுடன் தெரிவித்ததுடன், பொதுமக்கள் நம்முடைய அரசிடம் என்னென்ன திட்டங்களை - வாக்குறுதிகளை எதிர்பார்க்கின்றனர் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தனர். அதுதானே தொண்டனின் கடமையுணர்வு!
அதன்பின்னர், தங்கள் குடும்பத்தினரையும் எனக்கு அறிமுகப்படுத்திப் பேசச் செய்தனர். அந்தக் குரல்களில்தான் எத்தனை மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் முதலமைச்சர், கழகத்தின் தலைவர் என்பதைக் கடந்து தங்கள் குடும்பத்தில் ஒருவரிடம் பேசுவது போன்ற உணர்வைப் பெற முடிந்தது. தி.மு.கழகத்தை குடும்பக் கட்சி என்று சொல்லி காலந்தள்ளுபவர்களுக்கு, பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து ஊட்டப்பட்ட இந்தக் குடும்ப உணர்வும் கொள்கை உணர்வும் ஒருபோதும் தெரியப் போவதில்லை.
பாக முகவர்களிடம் நான் பேசிய பிறகு, மறுநாள் காலையில் அவர்கள் தங்கள் மாவட்டக் கழகச் செயலாளர்கள், பொறுப்பு நிர்வாகிகளிடம் அதனைப் பகிர்ந்து கொண்டு, ஊக்கத்துடன் களப்பணியாற்றிய நிலையில், மாவட்ட கழகச் செயலாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, “நீங்கள் பேசியதும் டபுள் உற்சாகத்துடன் எல்லாரும் வேலை பார்க்கிறார்கள்” என்று சொல்வது வழக்கம். உங்களில் ஒருவனான எனக்கு இதைவிட வேறென்ன பெருமை இருக்க முடியும்!
பிப்ரவரி 25-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் மேற்கொண்ட பரப்புரையின்போது வெள்ளம், வெள்ளம், மக்கள் வெள்ளம்! மகிழ்ச்சி வெள்ளம்! நீங்கள் இவ்வளவு தூரம் வரவேண்டுமா, வெற்றியை நாங்கள் உறுதி செய்துவிட்டோம் என வாக்காளர்களும் நிர்வாகிகளும் நம்பிக்கையுடன் என்னிடம் தெரிவித்தனர். எனினும், கழகத் தொண்டர்களையும் பொதுமக்களையும் இதுபோன்ற தேர்தல் களத்தில் சந்திக்கும்போது தனி உற்சாகம் ஏற்படுவது இயல்புதானே!
ஈரோட்டிலிருந்து சென்னை திரும்பியபிறகும் சிலர் அலைபேசியிலும், பலர் குறுஞ்செய்தியாகவும் வெற்றி நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தனர். பெண் நிர்வாகி ஒருவர், ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் நிலையுடன் ஒப்பிட்டு, ஒரு மாதகாலம் ஒரு குடும்பம் போல ஒன்றாகப் பழகிவிட்டு அவரவர் ஊருக்குத் திரும்பிச் செல்வது மனதுக்குச் சற்று பாரமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அதுதானே உடன்பிறப்பு எனும் பாசம்! எனினும், தேர்தல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கும்போது, மனதைச் சற்றுப் பக்குவப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தேர்தல் அரசியல் களத்தில் பங்கேற்றுள்ள சமுதாய இயக்கம். அதனால்தான் வெற்றி - தோல்விகளைக் கடந்து மக்களின் இயக்கமாகத் திகழ்கிறது. என்னுடைய 56 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் கழகம் ஆளுங்கட்சியாக இருந்த காலம் குறைவு. எதிர்க்கட்சியாகச் செயலாற்றிய காலம் அதிகம். எந்த நிலையில் இருந்தாலும் மக்களின் பக்கம் நிற்க வேண்டும் என்பதை 80 ஆண்டுகால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். 10 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி வரிசையில் திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தபோதும், மக்களின் நம்பிக்கைக்குரிய இயக்கமாகத் திகழ்ந்தது. மக்களின் பக்கம் நின்றது. அவர்களுக்காகப் போராடியது. அதனால்தான், தங்கள் நம்பிக்கையை வாக்குகளாக வழங்கி, நம்மை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், இன்பத் தமிழ்நாட்டிற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் இலட்சிய இயக்கத்திற்கும் முதன்மைத் தொண்டனாக என் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறேன்.
ஆட்சிப் பொறுப்பில் நாம் அமர்வதற்கு முன்பு, அரசியல் களத்தில் நமக்கு எதிர்நிலையில் இருப்பவர்கள், என் மீது எண்ணற்ற விமர்சன அம்புகளை எய்தார்கள். இப்போதும் எய்கிறார்கள். கழகத்தின் மீது வதந்திகளைப் பரப்பினார்கள். பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள். பொல்லாங்கு பேசினார்கள். என்னைவிட என் மீது அக்கறையாக ஜோதிடம் - ஜாதகம் எல்லாம் கணித்தார்கள். அவை எதுவும் என்னைத் தளரச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக அவை எனக்கு உரமாகி என்னைத் தழைக்கச் செய்தன. மேலும் மேலும் என்னை உழைக்கச் செய்தன. மக்களின் நம்பிக்கையைப் பெருக்கிடச் செய்தன. அதன் விளைவுதான், மக்களின் தீர்ப்பு நம் கையில் ஆட்சிப் பொறுப்பை வழங்கியது.
பதவி என்பது நமது இலட்சியப் பயணத்தின் வழியில் மக்கள் வழங்குகிற விரைவு வாகனம். அது விரைந்து செல்லும் காலத்திற்கேற்ப, அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றிட வேண்டும். மாநிலத்தின் உரிமைகளை மீட்டாக வேண்டும். தமிழ் மொழியின் பெருமையை - தமிழ் இனத்தின் வலிமையை - தமிழ் நிலத்தின் வளத்தை மேம்படுத்திட வேண்டும். உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைந்துள்ள நமது அரசு அதை இலட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது.
எல்லாருக்கும் எல்லாம் என்கிற நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இந்தியா முழுவதும் உற்று நோக்கப்படுகின்றன. இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றி வருகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் அயராது உழைக்கிறோம். மக்களின் நம்பிக்கைக்குரிய அரசாக திராவிட மாடல் அரசு இருக்கிறது.
ஒன்றரை ஆண்டுகாலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள், தொடர்ந்து முன்னெடுக்கும் செயல்பாடுகள் இவற்றால் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. தமிழ்நாடு அத்தகைய நிலையை அடைவதுடன், இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மைச் சிதையாமல், ஒருமைப்பாடு குலையாமல், மதநல்லிணக்கம் மிக்க ஜனநாயகம் தழைத்தோங்கும் நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கமாகும்.
என்னுடைய 70-ஆவது பிறந்தநாள் என்பது அதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கக்கூடிய ஒரு வாய்ப்பு என்பதைத்தவிர, வேறு வகையான ஆடம்பரங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நான் ஒருபோதும் விரும்புவதில்லை. பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவது என்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதை இப்போதல்ல, இளைஞரணிச் செயலாளராக இருந்தபோதிருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
எளிமையான முறையில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி, ஐம்பெரும் கொள்கை முழக்கமிட்டும், ஏழை - எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளாகும். கழகத்தினர் எது செய்தாலும், துரும்பைத் தூணாக்கி விமர்சனங்களுக்குக் காத்திருக்கும் எதிர்த்தரப்பினருக்கு கொஞ்சமும் இடம்தராமல் எளிய முறையில் நிகழ்வுகளை நடத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கழகத்தின் தலைவர் என்ற முறையில்தான் என்னுடைய பிறந்தநாள் விழாவுக்கு உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு இந்தளவில் அனுமதி வழங்குகிறேன். அரை நூற்றாண்டு காலம் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா என்றால் இந்தியாவே அதனை கவனிக்கும். அவரது பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாள் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டம், ஏடுகளின் தலைப்புச் செய்தியாக மாறும். தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த அன்புச் சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்கள் தலைவரின் பிறந்தநாள் விழாவை எத்தனை சீரும் சிறப்புமாக நடத்துவார் என்பதை இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சிலே எத்தனையோ நினைவலைகள்!
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களை இயற்கை நம்மிடமிருந்து பிரித்தபிறகு, கழகத்தின் தலைமைப் பொறுப்பு என் தோளில் சுமத்தப்பட்டிருக்கும் சூழலில், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் அரசியல் நிலைப்பாட்டினை இந்திய அளவிலான தலைவர்கள் அறிந்துகொள்ள நினைப்பதும், ஆதரவாக நிற்பதும் இயல்புதான். அந்த வகையில், சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஏற்பாட்டில் மார்ச் 1 அன்று மாலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் அன்பு அண்ணன் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருன் அவர்கள் தலைமை தாங்குகிறார். கழகப் பொருளாளர் - நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார்.
சிறப்புமிக்க அந்தப் பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமிகு.மல்லிகார்ஜூன கார்கே எம்.பி., ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், பீகார் மாநில துணை முதலமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் என இந்திய அளவிலான தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். நாட்டின் ஒற்றுமையையும், பன்முகத்தன்மையையும், அரசியல் சாசனம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் அதற்கான எதிர்காலச் செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் நான் ஏற்புரையாற்றுகிறேன். மா.சு. அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்.
உங்களில் ஒருவனான என்னுடைய 70-ஆவது பிறந்தநாளில் கழக உடன்பிறப்புகளான உங்கள் ஒவ்வொருவரின் அன்பான வாழ்த்துகளையும் மனம் உவந்து ஏற்றுக் கொள்வதுடன், திராவிடக் கருத்தியலின் அடிப்படை நோக்கங்களான சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மாநில உரிமை இவற்றைத் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய ஒன்றிய அளவில் நிலைநாட்டிடும் ஜனநாயக அறப்பணியில் நாம் அனைவரும் இணைந்து நின்று, தொடர்ந்து உழைத்திட வேண்டும் என விரும்புகிறேன். நம்முடன் கொள்கைத் தோழமை கொண்டுள்ள இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். “தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம். இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றுவோம்” என்பதே உங்களில் ஒருவனான உங்களின் முதன்மைத் தொண்டனான என்னுடைய பிறந்தநாள் செய்தி. அதற்கேற்ப அயராது உழைத்திட ஆயத்தமாக இருக்கிறேன். இலட்சிய உணர்வு கொண்ட உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பையே சிறந்த வாழ்த்துகளாகக் கருதுகிறேன்” என கூறியுள்ளார்.