முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், அவர் அவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
“ இந்தக்கூட்டம் குறைகளை கண்டுபிடிக்க நடத்திய கூட்டம் அல்ல. மக்களுக்காக பணி சிறக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டம் கூட்டியுள்ளோம். மக்களுக்காகத்தான் அரசு. மக்களை மையப்படுத்திய அரசுதான் நல்லரசாக அமைந்திட முடியும். அதை நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் நன்றாக அறிந்து வைத்திருப்பீர்கள்.
தொய்வு கூடாது:
அந்த எண்ணத்தை நெஞ்சில் ஏந்திதான் நாம் அனைவரும் செயல்பட வேண்டும். சுணக்கம் காணக்கூடிய சில பணிகள் இந்த கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். விரைவில் நிறைவேற்றுவோம் என நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். அதை செய்ய வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. தொய்வுகளை நீக்க வேண்டும்.
நமது பணிகளை காண வேண்டிய இடர்பாடுகளை நீக்க வேண்டும். உங்களை உற்சாகப்படுத்தவும், உங்கள் பிரச்சினைகளை கேட்டறியவும்தான் இந்த ஆய்வுக்கூட்டம். உங்கள் கருத்துக்கள் எல்லாம் அரசின் கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். அர்ப்பணிப்பு உணர்வோடு சிறப்பாக செயல்பட்டு வரும் அரசுப்பணியாளர்களுக்கு வாழத்துக்களையும் கூறுகிறேன்.
விளிம்பு நிலை மக்கள்:
கடந்த 20 மாத காலத்தில் நாம் ஆட்சிக்கு வந்து எத்தனையோ திட்டங்களை தீட்டியிருக்கிறோம். அப்படி தீட்டிய திட்டங்களில் 80 சதவீத பணிகளை நிறைவேற்றியும் காட்டியுள்ளோம். இவையனைத்தும் உங்கள் ஒத்துழைப்பாலே நிறைவேற்றியுள்ளோம். அதற்காக நன்றி. இந்த ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்க வேண்டும். இன்னும் வேகமாக வழங்க வேண்டும்.
இந்த ஆய்வில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகள், வருவாய்த்துறை உள்ளிட்ட பட்டா வாங்கும் சேவைகள், விளிம்பு நிலை மக்களின் நலன், சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் நலன் மேம்பாடு, பொதுக்கட்டமைப்பு, கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்த விவகாரங்கள் பற்றியும் இந்த ஆய்வில் பேசியுள்ளோம்.
நடவடிக்கை தேவை:
இந்த துறைகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் எந்தளவில் செயலாக்கம் பெற்றுள்ளன, எந்தளவு செயல்படுத்த தயார் நிலையில் உள்ளன என்பது குறித்தும் ஆய்வு செய்துள்ளோம். இதைப்பயன்படுத்தி துறைத்தலைவர்களும், அரசு செயலர்களும் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்ட செயலாக்கத்தில் ஏதேனும் மாற்றம் வேண்டுமென்றால் திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கமாக தலைமைச் செயலாளர்கள்,செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களைத்தான் நான் சந்திப்பேன். மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆய்வுக்கூட்டத்தை நடத்தியுள்ளேன். அடுத்தகட்டமாக, மண்டலத்திற்கே சென்று அந்த பணியை மேற்கொள்ள ஆய்வை மேற்கொண்டுள்ளோம். நீங்கள் திட்டத்தின் சாதக, பாதகங்களை கண் முன்னே பார்ப்பவர்கள்.
அந்த அடிப்படையில் இந்த கூட்டம் மிக, மிக முக்கியமான கூட்டமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு துறையை கவனித்தாலும் யாரும் தனித்தனியாக செயல்பட முடியாது. அரசுத்துறை ஒன்றுடன் ஒன்று இணைந்தது. அதனால், இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அடிப்படை வழிமுறை.
அடுத்த மாதம் பட்ஜெட்:
உங்கள் பணிகளை இணைக்கும் ஒரே விஷயம் மக்கள் நலன். அதை நீங்கள் மறக்கவே கூடாது. பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு செயல்திட்டங்களை பெறுதல் ஆகியவை எளிமையாக நடக்க வேண்டும். மக்கள் இதற்காக அலைய வைக்கப்படுகிறார்கள் என்று தகவல் வருகிறது. இதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். சிறப்பாக பணியாற்றுபவர்களை பாராட்ட வேண்டும்.
அனைத்து துறை வளர்ச்சி என்ற இலக்குடன்தான் செயல்படுகிறோம். அந்த சிந்தனையில்தான் செயல்படுகிறோம். தமிழக மக்களுக்கான வாக்குறுதிகள், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் இவையெல்லாம் அடிப்படையாக வைத்துதிட்டங்கள் தீட்டினோம். பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அதற்கு முன்னதாக திட்டங்களை முடிக்க கேட்டுக்கொள்கிறேன்.