தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை 3 மணி தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திக்கிறார்.


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் அண்ணாமலை, DMK FILES 2 மற்றும் டாஸ்மாக் குறித்த வெள்ளை அறிக்கையை வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


DMK FILES என்ற பெயரில் முன்னதாக திமுகவினரின் சொத்து விவரங்களை பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் பகிரங்கமாக வெளியிட்டார். ஆனால், இப்படியான செய்தி எதுவும் உண்மை இல்லை எனக்கூறி உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுக நிர்வாகிகளும் அண்ணாமலை மீது நோட்டீஸ் அனுப்பினர். 


முதல்  DMK FILES வெளியிட்டபோது இதன் இரண்டாம் பாகம் வருகின்ற ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவை சேர்ந்த 21 நபர்களின் சொத்துப்பட்டியலை வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 


முன்னதாக இதுகுறித்து பேசிய அண்ணாமலை, “ பழனிவேல் தியாகராஜன் குறித்து  2022 ஐனவரியில் பேசிய முதலமைச்சர் 3 தலைமுறையாக தமிழக வளர்ச்சிக்கு அர்ப்பணித்த குடும்பம் அவர்கள் , தனது மொத்த திறமையையும் நிதித்துறைக்கு பயன்படுத்தி வருகிறார் என கூறினார். பிடிஆர் திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசடராக இருந்த அவரை மாற்ற காரணம் என்ன..? ஆடியோ பிரச்சனைக்காக அவரை மாற்றியது ஏற்க முடியாது.  முதலமைச்சர் என் மீது இன்னொரு அவதூறு வழக்கு தொடர வேண்டும் , அதன் மூலம் அந்த ஆடியோ நீதிமன்றம் செல்லும், 1 மணி நேர முழு ஆடியோவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். பி.டி.ஆரை பகடைக்காயாக முதலமைச்சர் பயன்படுத்த கூடாது. 


பிடிஆர் ஆடியோ பதிவை வெளியிட்டதும் முதலமைச்சர் பார்வையில் குற்றம்தான். எனவே இரண்டாவது வழக்கை என் மீது முதலமைச்சர் தொடர வேண்டும். என் மீது மொத்தமாக 1461 கோடி இழப்பீடு கேட்டு திமுகவினர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தியாவில் யார் மீதும் இந்த அளவு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது இல்லை. பார்ட் 2 திமுக பைல்ஸ்  ஜூலை மாதம் வெளியாகும் 21 நபர்கள் இடம் பெறுவர்” என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், “அரசு தவறு செய்யவில்லை என்றால் வழக்கு ஏன் தொடரப்பட்டது என  முதலமைச்சர் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.  ஆரூத்ரா மோசடி பணம் எந்த அமைச்சருக்கு சென்றது என DMK பைல்ஸ் 2 -வது பாகத்தில் உண்மை வெளியாகும். DMK பைல்ஸ் மூன்றாவது பாகமும் வெளியாகும்” என்றார்.