காஷ்மீர் பிரிவினைவாதிகளை மண்ணுரிமை போராளிகள் என்று பாராட்டியவர்களை விட்டு விட்டு, அவர்களை கண்டித்த எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்வதா? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. 


இதுகுறித்து தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா மீது சென்னை விமான நிலைய காவல் துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



எச்.ராஜா மீது வழக்கு:


அமரன் திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் காஷ்மீர் பிரிவினைவாதிகளை மண்ணுரிமை போராளிகள் என பாராட்டிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான எம்.எச். ஜவாஹிருல்லாவுக்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.


அதற்காக மனிதநேய மக்கள் கட்சியினர் கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். தேசத்தை துண்டாட நினைக்கும் பிரிவினைகளைவாதிகளை மண்ணுரிமை போராளிகள் என்று பேசிய கொடுங்குற்றம் செய்தவர்களை தமிழக காவல்துறை கைது செய்திருக்க வேண்டும். அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டு, தேசத்திற்காக குரல் கொடுத்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.


கடந்த நவம்பர் 15ஆம் தேதி சென்னை பல்லாவரத்தில் நடந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுக்கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் நிர்வாகி யாகூப், எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யக்கூட மறுக்கும் காவல்துறை, மனிதநேய மக்கள் கட்சியினர் கொடுத்த புகாரில் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளது தமிழகத்தின் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.


அமரன் பட விவகாரம்:


பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை பற்றியெல்லாம் வாய்கிழிய பேசும் திமுகவினர், ஆட்சிக்கு வந்து விட்டால் திமுகவுக்கு எதிராக மூச்சு விட்டால்கூட கைது செய்து, பல நூறு கிலோ மீட்டர் காவல்துறை வாகனங்களில் அலைக்கழித்து கொடுமைப்படுத்துகின்றனர். தேசத்திற்கு எதிராகவும், ராணுவத்திற்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் தினந்தோறும் அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்கள் மீதெல்லாம் புகார் கொடுத்தாலும் கண்டும் காணாமலும் இருக்கும் தமிழக காவல்துறை, எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை. திமுக அரசின் தவறுகளை உடனுக்குடன் எச்.ராஜா அம்பலப்படுத்தி வருகிறார். அது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். திமுக அரசின் எந்த மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சுபவர் எச்.ராஜா அல்ல என்பது முதல்வர் ஸ்டாலினும் அறிவார். எனவே, எச்.ராஜா மீதான பதியப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.