கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.


ஆனால், பா.ஜ.க.வுக்கு தமிழ்நாடு பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியிருப்பது பா.ஜ.க.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், அது தோல்வியில் முடிவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 


புது கட்சிகளை குறிவைக்கும் தமிழ்நாடு பாஜக:


இருப்பினும், எப்படியாவது கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கும் முனைப்பில் பா.ஜ.க. இருந்து வருகிறது. ஆனால், ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய இரு கட்சிகளை தவிர்த்து பாஜக கூட்டணியில் புதிதாக யாரும் இணையவில்லை. 


இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு அரசியல் கட்சிகளை கூட்டணிக்காக இணைத்து பேச்சுவார்த்தை நடத்தவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  மாநில அளவிலான இந்த குழுவில் 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


இக்குழுவில், பாஜக முன்னாள் மாநில தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேத்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.இராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


பரபரக்கும் அரசியல் களம்:


தமிழ்நாட்டை பொறுத்தவரையில், திமுக தலைமையிலான கூட்டணி பலமாக உள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் மக்களவை தொகுதியும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த தொகுதிகள் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.


காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரையில், பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதையும் படிக்க: திமுக காணாமல் போகும் என்றவர்கள் தான் காணாமல் போய் உள்ளார்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி