"நாளைக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. அடித்து சொல்லும் அண்ணாமலை!
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் வகையில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டு நாளை அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக நாளை மகிழ்ச்சியான செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் வகையில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை டெல்லியில் சந்தித்ததை தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அண்ணாமலை குறிப்பிடுகையில், "டெல்லியில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், மூத்த தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசினோம்.
ரத்தாகிறதா டங்ஸ்டன் சுரங்க திட்டம்?
மேலூர் தொகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். மேலும், பிரதமர் மோடி, எப்போதும், கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளின் நலனுக்காகத் துணை நிற்பார் என்று நமது விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.
மேலும், மேலூர் தொகுதி விவசாயப் பெருமக்களின் கோரிக்கைகளுக்கேற்ப, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் வகையில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்துள்ளார்" என பதிவிட்டுள்ளார்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து, அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்