தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு வருகை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.


அப்போது ”நேற்று பிரதமருடன் ஒரு மணி நேரம் பேசினேன். தமிழ்நாட்டில் நாம் என்னென்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று கேட்டறிந்தார். தமிழ்நாடு மக்கள் மீது பிரதமர் மோடிக்கு அளவு கடந்த ஒரு பாசம் உள்ளது. நேற்று ட்விட்டரில் வணக்கம் மோடி என்று ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. மக்களின் பேரன்பினால், குறிப்பாக தமிழ் மக்களின் அன்பினால் மட்டுமே இது சாத்தியமானது. தொடர்ந்து உங்களுடைய ஊக்கம் தமிழக பா.ஜ.க. கட்சிக்கு தேவைப்படும்.


பா.ஜ.க.வுக்கு சவால்


தமிழ்நாடு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி  மோடி என்னிடம் கேட்டு அறிந்தார். கன்னியாகுமரியைப் பொறுத்த வரை பா.ஜ.க. நம்பர் ஒன் கட்சி. கொட்டும் மழைகள் கூட பிரதமர் மோடி காரை விட்டு இறங்கி வந்து மக்களுக்கு கையசைத்தார். அப்படி என்றால் தமிழ்நாட்டில் பா.ஜ.க. எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று பாருங்கள்.


காவல்துறையினர் நேற்று பா.ஜ.க.வினரிடம் தவறாக நடந்து கொண்டனர். ஆளும் கட்சியினர் காவல்துறையை ஏவி விடுகிறார்கள். சில சமயத்தில் தி.மு.க. அரசு அதிகாரிகளை ஏவி விட்டாலும் கூட, எங்களுக்கும் ஆள் பலம் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பா.ஜ.க. மீது அவதூறு பரப்புகிறார்கள். பா.ஜ.க.வுக்கு இது சவாலான காலம். சித்தாந்தத்தின் அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு தி.மு.க. எதிரி. தமிழ்நாட்டில் காங்கிரசின் நிலைப்பாடு மிகவும் மோசமாக உள்ளது.


மத்தியில் ஆதரிப்போம் மாநிலத்தில் எதிர்ப்போம் என்ற போக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல்பட்டு கொண்டிருக்கிறது. எம்.பி. சீட்  தரமாட்டோம் என்ற திமுக மிரட்டலை அடுத்து காங்கிரஸ் தற்பொழுது நிலைபாட்டை மாற்றி இருக்கிறது.


10 சதவீத ஒதுக்கீடு 


காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு நாளும் அகால பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியர்களுக்கு இந்த 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஆனால், இது பிராமணர்களுக்கு மட்டும் என திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. எத்தனை சமூகத்தில் இதே போல் பின் தங்கியவர்கள் இருக்கிறார்கள் என்பதை பற்றி திமுக கவலைப்படுவதில்லை.


தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு கட்டாயம். அதிக ஓபிசி வகுப்பினர் இருக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதை பிற மாநிலங்களோடு ஒப்பிட்டு அந்த மாநிலத்தில் இதனை கொண்டு போகக் கூடாது. கேரள முதலமைச்சர் கேரளாவுக்கு தகுந்தார் போல் இந்த 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்கிறார்கள், ஆனால் திமுக கண்மூடித்தனமாக இதனை எதிர்க்கிறது.அனைத்து கட்சிக் கூட்டம் என்பது நாடகம்தான்.


கோயமுத்தூர் குண்டு வெடிப்பை மதப்பிரச்சனை வராமல் பாஜக மென்மையாகக் கையாண்டது. தமிழ்நாட்டின் NIAவை இன்னும் பலப்படுத்த வேண்டும் என அமித்ஷாவுக்கு கோரிக்கை வைத்தோம். சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூறினார்.


பா.ஜ.க. வளர வேண்டும்


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் அனுமதி கேட்டு அவரைச் சந்தித்தார். அதேபோல் முன்னாள் துணை முதலமைச்சர் என்ற முறையில் ஓபிஎஸ் அவர்கள் அனுமதி பெற்று மோடியை வழி அனுப்பினார். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.


தலைவர்கள் மாறினாலும் நாங்கள் கட்சியின் கூட்டணியில் தான் உள்ளோம். தொண்டர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் ஒரு கட்சியின் தலைவர் யார் என்று. ஐந்து ஆண்டுகள் தேசியத் தலைவராக பணியாற்றியவர் 
அமித்ஷா. செய்ய முடியாது என யாரும் நினைத்தாலும் அதை செய்து காட்டக்கூடியவர் அமித்ஷா. அதற்கான காலம் இருக்கிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் பாஜக  வளர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.