சனாதன தர்மம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பேசிய கருத்து பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்கள் தொடங்கி மத்திய அமைச்சர்கள் வரை அதற்கு கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். தமிழ்நாடு மட்டும் இன்றி தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.


உதயநிதி பேசியது என்ன?


சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை எதிர்த்து கடுமையாக பேசியிருந்தார். "சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. டெங்கு, மலேரியா நோயை போல் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என உதயநிதி பேசியிருந்தார்.


ஆனால், உதயநிதியின் இந்த கருத்தை எக்ஸ் வலைதளத்தில் திரித்து பதிவிட்ட பாஜக தேசிய ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா, "இனப்படுகொலை செய்ய உதயநிதி அழைப்பு விடுப்பதாக" கூறினார். இதை தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்து மக்களுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசுவதாக கருத்து பரவியது.


அமைச்சர் சேகர் பாபுவை டார்கெட் செய்யும் அண்ணாமலை:


இந்த நிலையில், இந்த விவகாரத்தை முன்னிறுத்தி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அண்ணாமலை குறிப்பிடுகையில், "சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில், சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றுதான் என்பதை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உறுதிப்படுத்தினார். பின்னர், அதே கூட்டத்தில், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசினார். 


இந்து மதத்திற்கு எதிரான இந்த வெறுப்புப் பேச்சு பேசும்போது, மேடையில் மெளனமாக இருந்தவர் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. மாநிலத்தின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமையை அவர் இழந்துவிட்டார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.


செப்டம்பர் 10ஆம் தேதிக்கு முன்பு அவர் பதவி விலகவில்லை என்றால், செப்டெம்பர் 11 ஆம் தேதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பாஜக தொண்டவர்கள் முற்றுகையிடுவார்கள். எங்கள் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.







சனாதனம் குறித்து தான் பேசிய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், "சனாதன தர்மம் சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலை செய்ய நான் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனிதநேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும். நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன். ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் சார்பாக நான் பேசினேன்" என்றார்.