திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் மீது எம்.பி. நவாஸ் கனி கும்பலாகச் சென்று, அசைவ உணவு உண்டிருப்பது, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் மேற்கொண்டுள்ளார்.

Continues below advertisement

திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, சேவல் அறுக்க போலீசார் சமீபத்தில் தடை விதித்துள்ளனர். மலையில் அமைந்துள்ள தர்காவுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் மத்தியில் இந்த தடை கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

"தமிழ்நாட்டில் மதக்கலவரம்"

Continues below advertisement

இந்த விவகாரத்தில், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மதக்கலவரத்தை ஏற்படுத்த நவாஸ் கனி முயற்சி செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், "ஆன்மீக பூமியான தமிழ்நாட்டில் அனைத்து மதங்களைச் சார்ந்த ஆலயங்களுக்கும் அவற்றிற்கான வழிபாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. அவற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும். ஆனால், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை வைத்து நடைபெறும் நிகழ்வுகள் விரும்பத்தகாதவையாக இருக்கின்றன.

அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு:

குறிப்பாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில், ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் மீது கும்பலாகச் சென்று, அசைவ உணவு உண்டிருப்பது, முற்றிலும் தவறான செயல் மட்டுமின்றி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுமாகும்.

 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், உலகில் பல மதங்கள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தனை ஆண்டு காலமாக, தமிழக மக்கள் சமூக நல்லிணக்கத்துடன், அனைத்து மதங்களுக்குமான வழிபாட்டு முறைகளை மதித்து நடந்து வருகின்றனர்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், அதனைக் கெடுக்கும்படி நடந்து கொண்டிருப்பது, முட்டாள்தனமானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உடனடியாக, இது போன்ற சமூக அமைதியைக் கெடுக்கும் வீண் நடவடிக்கைகளைக் கைவிட்டு, இத்தனை ஆண்டு காலமாகத் தொடரும், சகோதரத்துவமான நடைமுறைகளையே தொடர வேண்டும் என்று, அனைத்து சமூக மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.