Tamil Nadu Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவை  கூட்டத்தொடர் வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும், கூட்டத்தொடர் எப்போதுவரை நடைபெறும் என்பது குறித்து சட்டமன்ற அலுவல் குழு முடிவு செய்யும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 




மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2023- 2024ஆம் நிதியாண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


சட்டப்பேரவை கூடுவது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தெரிவிக்கையில், செய்தியாளர்கள் தரப்பில் இருந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் அதிமுக வலியுறுத்திய ஆர்.பி. உதயகுமார் அமரவைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுப்பட்டட்டது. அதற்கு, ஏற்கனவே இருக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. மேலும் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக எந்த மாற்றமும் இல்லை என பதில் அளித்துள்ளார். அதாவது, ஓ.பன்னீர் செல்வமே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் அமர்வார் என்பது உறுதியாகியுள்ளது. 


அதேபோல், நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், அது தமிழ்நாடு சட்டமன்றத்திலும் நடைமுறைக்கு வருமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் சேர்த்துதானே மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதா நிறைவேறி சட்டம் இயற்றப்படும் என நம்பிக்கை உள்ளதா என பதில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த மசோதாவை இவர்கள் 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றபோது கொண்டு வந்திருந்தால் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இப்போது தேர்தல் வருகிறது என்பதற்காக மத்திய அரசு இப்படிச் செய்கிறது என அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஒரே கையெழுத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகளிருக்கு ஏதாவது அறிவிக்கவேண்டும் என மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக என்னிடம் கூறுகிறார்கள் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். 


டெல்லியில் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான உரிமை அனைத்தும் முதலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசிடம் இருந்தது. இடையில் ஆளுநர் தலையிட்டதால் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு உச்ச நீதி  மன்றத்தில் மாநில அரசுக்குத்தான் முழு உரிமையும் இருப்பதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் பின்னர் இது தொடர்பாக மத்திய அரசு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அசுர வேகத்தில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றுகின்றனர். இந்த வேகம் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக இல்லை எனவும் அப்பாவு தெரிவித்தார். 


மேலும், நாடாளுமன்ற கூட்டுக்குழு பொதுவாகவே ஜனாதிபதியை வைத்தே நடத்தப்படும். ஆனால் இவர்கள், பழைய நாடாளுமன்ற நிறைவு விழாவிற்கும், புதிய நாடாளுமன்ற துவக்க விழாவிற்கும், நேற்று நடைபெற்ற முதல் கூட்டத்தொடரின் கூட்டுக்குழுவிற்கும் ஜனாதிபதியை அழைக்கவில்லை. இப்படி இருக்கும்போது மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது நமக்குத் தெரியாது எனவும் பதில் அளித்தார். நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவரை எதற்காக புறக்கணிக்கின்றனர் என தெரியவில்லை. 


தற்போது உள்ள ஆளுநர் மட்டும் இல்லாமல் எந்த ஆளுநர் வந்தாலும் அவர்களுடன் இணக்கமாகவே செயல்படுவேஒம் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.