TN Assembly: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, 2025ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
நடப்பாண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்:
நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படுகிறார். தலைமைச் செயலகத்திற்கு காலை 9.20 மணிக்கு வருகை தரும் அவருக்கு காவல்துறை அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
ஆளுநர் உரை நிகழ்த்த வருகை தரும் அவரை பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டசபை முதன்மைச் செயலாளர் சீனிவாசன் பூங்கொத்து அளித்து வரவேற்க உள்ளனர். இதன்பின்னர், நடப்பாண்டிற்கான முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.
என்ன செய்யப்போகிறார் ஆளுநர்?
ஆளுநர் உரை 45 நிமிடங்கள் நீடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரையை 45 நிமிடங்கள் வாசிக்க உள்ளார். அவர் வாசித்து முடித்த பிறகு ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் சட்டமன்றத்தில் வாசிப்பார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. சமீபகாலமாக பெரியளவில் மோதல் போக்கு இல்லாவிட்டாலும், கடந்த கால ஆளுநர் உரையின்போது ஆளுநர் உரையை புறக்கணித்து ஆர்.என்.ரவி பாதியிலே சென்ற சம்பவம் ஒட்டுமொத்த தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி முழு உரையையும் வாசிப்பாரா? அல்லது அரசின் உரையில் ஏதேனும் விடுவித்து வாசிப்பாரா? அல்லது கடந்த காலங்களைப் போல சட்டமன்றத்தில் இருந்து பாதியிலே வெளிநடப்பு செய்வாரா? என்ற பல எதிர்பார்ப்புகளும், கேள்விகளும் எழுந்துள்ளது.
அனல் பறக்கப்போகும் சட்டமன்றம்:
இன்று ஆளுநர் உரை முடிந்த பிறகு நாளை அவை மீண்டும் கூடுகிறது. சமீபத்தில் காலமான ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இளங்கோவன் மறைவிற்கும், மற்ற பிற முன்னாள் உறுப்பினர்களின் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.
அதற்கு அடுத்த நாட்களில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் பேரவையில் மேற்கொள்ளப்படும். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று அவை முடிந்த பிறகு சபாநாயகர் அப்பாவு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும்? என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார். பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு நடக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசின் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.