சென்னை மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ஆகியவற்றில் பயணிக்க ஒரே அட்டை பயன்படுத்தும் திட்டத்தின், ஒரு பகுதியாக சென்னை மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் அட்டை திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
அரசு போக்குவரத்துக் கழகம் :
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 8 போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுகிறது. அந்த வகையில் போக்குவரத்து கழகங்களில், மின்னணு எந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டுகள் வழங்கும் முறை 100% செயல்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி மாதத்திற்குள் முழுமையாக, இந்த பணிகளை முடிக்க போக்குவரத்து துறை திட்டம் தீட்டியுள்ளது.
மாநகரப் பேருந்துகள் - Chennai City Bus
சென்னை மாநகரை பொறுத்தவரை, மாநகர பேருந்துகள், சென்னை மின்சார ரயில் சேவை மற்றும் சென்னை மெட்ரோ ஆகியவை பிரதான போக்குவரத்து வசதியாக இருந்து வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்த மூன்று சேவைகளை தினமும் பயன்படுத்தி வருகின்றன.
ஒரே அட்டை திட்டம் - One City One Card
இந்தநிலையில் சென்னையில் இருக்கும் மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ ஆகிய மூன்று பொது போக்குவரத்துகளில் ஒரே பயண அட்டை மூலம் பயணிக்க முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஒரே பயண அட்டை பயன்பாட்டிற்கு வரும்போது, பயண அட்டையில் தேவையான தொகையை முன்கூட்டியே, ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். பயணிப்பதற்கு ஏற்றவாறு அட்டையில் இருந்து பணம் பிடித்துக் கொள்ளும் வகையில், இந்த திட்டம் செயல்பட உள்ளது. அதேபோன்று மாதாந்திர பாஸ் பயன்படுத்துபவர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்து தரப்பட உள்ளது.
இன்று செயல்பாட்டிற்கு வரும் திட்டம்
ஏற்கனவே எஸ்.பி.ஐ வங்கி சார்பில் மெட்ரோ பயனாளிகளுக்கு இந்த அட்டை வழங்கப்பட்டு, மெட்ரோவில் சிங்காரச் சென்னை அட்டை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில், சென்னை மாநகர பேருந்துகளில் சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்படுவதால் இனி மாநகர பேருந்துகளில், ஒரே அட்டையை வைத்து பயணிக்க முடியும். முதற்கட்டமாக 50 ஆயிரம் அட்டைகள் எஸ்.பி.ஐ மூலம் கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது. இன்று முதல் கோயம்பேடு மற்றும் பிராட்வே பேருந்து நிலையங்களில் விநியோகிக்கப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டியாக மாறும் சென்னை
சென்னை மின்சார ரயில் நிலையங்களிலும், இந்த அட்டை பயன்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சென்னை மின்சார ரயிலிலும் இந்த திட்டம் பயன்பாட்டிற்கும் வந்த பிறகு, சென்னையில் இருக்கக்கூடிய மூன்று பொது போக்குவரத்துகளில், சென்னை மெட்ரோ, மாநகரம் பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்கள் ஆகியவற்றில் ஒரே அட்டையை பயன்படுத்தி பயணிக்க முடியும். ஏற்கனவே இந்த திட்டம் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால், சென்னையிலும் இளைஞர்கள் மத்தியில் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.