அரியலூர் பள்ளி மாணவியின் தற்கொலை பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், இன்று செய்தியாளர்களை சந்தித்த தஞ்சை எஸ்.பி ரவளிப்ரியா, தஞ்சை மாணவி விவகாரத்தில், மரண வாக்குமூலத்திலும், முதற்கட்ட விசாரணையிலும் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதற்கான எந்த ஆதாரங்களும் உறுதியாகவில்லை என தெரிவித்துள்ளார். இந்த சூழலில் பாஜக கோரும் இச்சட்டத்தின் வரலாறு குறித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.


கடந்த 1981இல் திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரத்தில் சுமார் 800 தலித்துகள் வற்புறுத்தலின்பேரில் முஸ்லிம் மதத்திற்கு மாறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அடுத்த ஆண்டே கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியில் மோசமான கலவரம் மூண்டது. அதற்கு மதம் மாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்தான் காரணம் என்றும் தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக விசாரணை செய்த ஆணையம், மதமாற்றத் தடைச் சட்டம் கட்டாயம் தேவை என்று பரிந்துரை செய்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். 1997ம் ஆண்டிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மதமாற்ற சம்பவம் நடந்ததாகக் குற்றமும் சாட்டினார்.


2002-ல் மதமாற்றத் தடைச் சட்டம்


இதையடுத்து, 2002-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதமாற்றத் தடைச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா. ''மனதார விரும்பி மதம் மாறுபவர்களுக்கு இந்தச் சட்டத்தால் எந்தப் பிரச்சினையும் வராது. ஆனால் வற்புறுத்தியும், ஆசை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் செய்ய முயற்சிப்பவர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள்'' என்றும் அறிவித்தார். 




எனினும் சட்ட மசோதா அறிமுகமான அடுத்த நாளே திமுக, பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், சிறுபான்மை இன அமைப்புகளும் இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தின. எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், சென்னையில் பிரம்மாண்டமான மாநாடும் நடத்தப்பட்டது. அதில் திமுக தலைவராக இருந்த கருணாநிதி உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


3 ஆண்டுகள் சிறை


எனினும் சட்டத்தைக் கொண்டு வருவதில் உறுதியாக இருந்தார் ஜெ. இந்தச் சட்ட மசோதாவின்படி, கட்டாயப்படுத்தியோ, ஆசை வார்த்தைகள் கூறியோ, பண ஆசை காட்டியோ ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு மாற்றுவது குற்றச் செயலாகும். இதுபோன்ற செயலில் ஈடுபட்டு கைதாகும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.


18 வயதுக்குக் கீழ் உள்ளோர், பெண்கள் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை மதம் மாற்றினால், மதம் மாற்றம் செய்தவர்களுக்கு 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.


மதம் மாற்றும் சடங்கைச் செய்தாலோ அல்லது அச்சடங்கு பற்றி மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிக்கவில்லை என்றாலோ ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இவை அனைத்தும் பிணைத்தொகை செலுத்தி வெளிவர முடியாத குற்றங்களாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. 




திமுக - பாஜக கூட்டணி


தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, பாஜக மட்டும் அந்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது. இத்தனைக்கும் அப்போது திமுக - பாஜக கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்தன. 


இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான கட்சிகள் மதமாற்றத் தடைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தன. விவாதம் முடிந்தவுடன் எதிர்க் கட்சிகளின் வற்புறுத்தலைத் தொடர்ந்து ஓட்டெடுப்பு நடந்தது. அதில், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆதரவாக 140 வாக்குகளும் எதிராக 73 வாக்குகளும் விழுந்தன. சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட்டது.


2003-ல் போப் ஆண்டவர் எதிர்ப்பு


2003ஆம் ஆண்டு ஜூன் மாதம் போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால், கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், ''மதத் தலைவராக இருந்தாலும், ஒரு ஜனநாயக அரசு நிறைவேற்றிய சட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதற்கு போப் ஆண்டவருக்கு எந்த அதிகாரமும் இல்லை'' என்றுகூறி ஜெயலலிதா அதிரடி காட்டினார். 


எனினும் அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 1 தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதையடுத்து 2004-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி மதமாற்றத் தடைச் சட்டத்தை நீக்கும் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தார் ஜெயலலிதா.




ஆனால், அதனைத் தொடர்ந்து கூடிய சட்டப்பேரவைத் தொடரில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை நீக்கும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இது சர்ச்சையானது. பேரவை கூடிய 6 வாரங்களுக்குள் தடைச் சட்டத்தை நீக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்ற நிலையில், நிறைவேற்றாதது குறித்துக் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கேள்வி எழுப்பினர். 


அதனையடுத்து திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே, தமிழ்நாடு கட்டாய மத மாற்றத் தடை (நீக்க) சட்ட முன் வடிவு 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மே மாதம் 31-ம் தேதி அந்தச் சட்ட முன்வடிவு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 


2019-ல் மதமாற்றத் தடைச் சட்டம் கோரி பொதுநல மனு


இதற்கிடையே தமிழ்நாட்டில் மதமாற்றத் தடைச் சட்டம் நிறைவேற்றக்கோரி மதுரையில் கடந்த 2019ஆம் ஆண்டு பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  இதை விசாரித்த நீதிபதிகள், ''மதமாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்றுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மேலும் மனுதாரரின் புகாருக்கு உரிய ஆதாரங்களைத் தாக்கல் செய்ய முடியாது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தனர்.




2021-ல் தேர்தல் வாக்குறுதி


இந்த நிலையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு பாஜக தேர்தல் வாக்குறுதியில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


எனினும் மத்திய அரசு திருமணம் என்னும் பெயரில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதைத் தடுக்க மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரும் திட்டம் இல்லை என்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெரிவித்தது. 


2022-ல் சர்ச்சை


இந்நிலையில் அரியலூர் பள்ளி மாணவி ஒருவர், பள்ளி விடுதியில் அனைத்து அறைகளையும் சுத்தம் செய்யும்படி காப்பாளர் கட்டாயப்படுத்தியதால் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார் என மாணவி பேசிய வீடியோவை அடிப்படையாகக்கொண்டு தகவல் வெளியாகின. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனிக்காமல் நேற்று (ஜன.19) இறந்து போனார். 


மதம் மாறச்சொல்லி, பள்ளி நிர்வாகம் சார்பில் கட்டாயப்படுத்தியதாலேயே மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்றும் அவரின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும் தெரிவித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. 


 



பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த மாணவி


இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, ''மதமாற்றம் - தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி. ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு மாநில அரசு கவனம் கொடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும். கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


எனினும் முதற்கட்ட விசாரணையில் மாணவியை மதம் மாறச் சொல்லியது உறுதியாகவில்லை என்று தஞ்சாவூர் எஸ்.பி.ரவளிபிரியா தெரிவித்துள்ளார்.


மதமாற்றத் தடைச் சட்டம் வருமா?


இந்த சூழலில், திமுக அரசு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வர வாய்ப்பு உள்ளதா என்னும் விவாதம் எழுந்துள்ளது.