நீட் தொடர்பாக வருகின்ற ஜனவரி 8 ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவில்லை. இது தொடர்பான மசோதா பற்றிய கடிதம் அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை என்றும், போராட்டத்தின் மூலமே அனைத்து உரிமைகளும் பெற்றிருப்பதால் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் பேசியதாவது : "எந்தவொரு கல்லூரிச் சேர்க்கையாக இருந்தாலும், அதற்கு வைக்கப்படும் நுழைவுத் தேர்வானது ஏழை எளிய, கிராமப்புற விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தை பாதிக்கும். அதனால் அந்தத் தேர்வுகளைத் தவிர்த்து, பள்ளிக் கல்வித் திறனை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும்.


12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிலே மருத்துவ மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று, திறன்மிக்க நம் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலக்கூடிய வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது. இத்தகைய மருத்துவர்கள் மூலமாக இன்று மருத்துவத் துறையிலே நம் நாட்டிற்கே முன்னோடியாக நாம் விளங்கிக் கொண்டிருக்கிறோம்.


கடந்த காலத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கான திருத்தச் சட்டம், அதன்பிறகு கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியன மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன்னிறுத்தி, நமது மாணவர்களை வெகுவாக பாதிக்கிறது. 


நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதற்கு வசதி வாய்ப்புகள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளிக் கல்வியால் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கி, பள்ளிக் கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக ஆக்குவதாகவும் இந்த “நீட்' தேர்வு முறை உள்ளது. 


மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைப்பதாக மட்டுமல்ல; இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைப்பதாகவும் இந்தச் செயல்கள் அமைந்துவிட்டன. இதனை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. எனவே, நமது சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நாளை மறுநாள், அதாவது, 8-1-2022 அன்று கூட்டுவது என்று முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் அனைவரும் கலந்து அந்தக் கூட்டத்தில் கொள்ள வேண்டுமென்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண