இந்திய மன்னர்களின் வரலாற்றிலேயே கடல் கடந்து போரிட்டு, வடக்கே துங்கப்பத்திரை நதிக்கரை முதல் கிழக்கே கடாரம் ஸ்ரீவிஜயம் வரை ஒரு பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய மா மன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரையை அரசு விழாவாக அறிவித்து பெருமையடைந்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
ராஜராஜசோழனுக்கும் – வானவன்மாதேவிக்கு பிறந்த ராஜேந்திரசோழன், தனக்கென அமைத்த வரலாற்று சிறப்புமிக்க தலைநகரம் தான் ‘கங்கை கொண்ட சோழபுரம்’. ராஜேந்திரசோழனுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியர்களுடன் போரிட்டு, அந்த பாண்டிய மன்னரை வென்றான் பராந்தக சோழன், போரில் தோற்று ஓடிய பாண்டிய மன்னன் தனது மணிமுடியை ஈழம் சென்று பதுக்கி வைத்தான். அதனை கடல் கடந்து சென்று கைப்பற்றிய ராஜேந்திர சோழனை இப்படி வர்ணிக்கிறது அவரது மெய்கீர்த்தி
‘பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த
சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்
தெண்டிரை ஈழ மண்டல முழுவதும்’.
கங்கை கொண்ட சோழபுரம்
ராஜேந்திர சோழனின் வெற்றிகளில் மணிமகுடமாக திகழ்வது அவனது படை கங்கை வரை சென்று இடையில் இருந்து அத்தனை நிலங்களையும், மன்னர்களையும் வென்று கங்கை நதியின் புனித நீரை எடுத்து வந்ததுதான். இராஜேந்திரனின் மெய்கீர்த்தியில் கங்கைநீரை எடுத்த இடம்பற்றி
"நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும், நெடுங்கடல் போல் பரந்து நிற்கும் உத்திரலாடம் என்னும் இடத்தில் நறுமணமிக்க மலர்களையுடைய தூய்மையான கங்கை நீரை சோழர் படை எடுத்தது”என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கங்கையில் நீர் எடுத்து வரும் சோழர்படையை இராஜேந்திரன் கோதாவரி நதிக்கரை வரை சென்று வரவேற்றான் என்று கல்வெட்டுகள் ஆதாரம் புகட்டுகின்றன. அந்த கங்கை நீரால் கங்கைநீரால் சோழபுரம் கோவில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. சோழகங்கம் என்னும் ஏரியும் வெட்டி அதில் கங்கைநீரை கலந்தான் ராஜேந்திர சோழன். இதனை ‘இராஜேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருகின்ற இடத்து திருவடி தொழுது’ என கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன.
ராஜேந்திர சோழனிடம் தோற்றுப்போன, இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன், தென் இலங்கை சென்று ஒளிந்துக்கொண்டான். அவனைத் தேடிப்பிடித்த ராஜேந்திரசோழன், சோழ நாட்டிற்கு அவனை கைதியாக கொண்டுவந்தான். அவனது மகன் காஸ்யபன், தென்னிலங்கையில் தனது தந்தையின் தளபதிகள் உதவியோடு, எழுச்சி பெற்று விக்கிரமபாகு என்ற பெயரில் சிங்கள அரசை நிறுவினான். விடுவான சோழன் ? மீண்டும் இலங்கை மீது படையெடுத்து சிங்கள சாம்ராஜ்ஜியத்தையோ அடியோடு அழித்து, விக்கிரமபாகுவையும் கொன்றழித்தான்.
இப்படி பெரும் வீரத்தோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் அவதரித்த தினம்தான், ஆடி மாதம் வரும் திருவாதிரை நன்னாள். திருவாதிரை நட்சத்திர நாளில் திருவொற்றியூர், விருத்தாசலம் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும் என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அவன் குழந்தை பருவத்தை திருவலங்காடு செப்பேடு 86 இப்படி குறிப்பிடுகிறது ‘இராஜராஜனின் மகனாக மதுராந்தகன் பிறந்தான். அரசனுக்குரிய எல்லா இலட்சணங்களும் உடையவன். சிவபெருமானால் எரிக்கப்படாத மற்றொரு மன்மதனை போன்ற அழகன்’ அதேபோல, ‘அவன் தன் புன்னகையாலும் உடலின் அழகாலும் பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஊட்டினான். எதிரிகளுக்கு பேரச்சத்தை ஒவ்வொறு நாளும் அளித்தான்’ என கரந்தை செப்பேடு குறிப்பிடுகிறது.
இப்படி எதிரி நாட்டு மன்னர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், நாட்டு மக்களுக்கு நல்ல பண்பாளனாகவும் விளங்கி புகழ்பெற்ற ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற தமிழ் ஆர்வலர்களின் பல்லாண்டு கால கோரிக்கைக்கு செவி மடுத்து, இப்போது அரசு விழாவாக அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்