மருத்துவத்துறை பணிகளுக்காக ஓடுவதற்கு முன்பாகவே மாரத்தானில் ஓடி புகழ்பெற்றவர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். ’’ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது’’ என்ற பழமொழி எவ்வுளவு உண்மையோ அதேபோல ஓடிய ’கால்களும் சும்மா இருக்காது என்ற புதுமொழியும் அந்த அளவுக்கு உண்மையாகி உள்ளது.


உலகின் பல்வேறு பகுதிகளில் இதுவரை நடந்த 130க்கும் மேற்பட்ட மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு ஓடிய மா.சுப்பிரணியன், தனது பல்வேறு பணிகளுக்கிடையே தற்போதும் காலை நடைபயிற்சியை தவறவிடுவதில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட தனது வீட்டின் மொட்டை மாடியில் ஓடிக்கொண்டிருந்த மா.சுப்பிரமணியன், தற்போது அரசுப்பணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுகளையும் திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளதால், அங்கே சென்றும் தன்னுடைய காலை நடைபயிற்சியை தவறாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.  


பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கரூர் மாவட்டத்திற்கு வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். நேற்றிரவு கரூரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு தங்கினார். எங்கு சென்றாலும் உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள மா.சுப்பிரமணியன், அதிகாலை 5 மணியளவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து மாவட்ட ரோட்டரி மைதானத்தில் ’டீ சர்ட்’ சகிதமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபயிற்சி மேற்கொண்டனர். 



பின்னர் கரூரில் ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 2,424 பயனாளிகளுக்கு, 2.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் வழங்கினர். சிஎஸ்ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனை வாயிலாக தடுப்பூசி வழங்குதல், மருத்துவ கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு, கோவிட் சம்பந்தமான அனைத்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 



வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1,554 பயனாளிகளுக்கு 1.86 கோடி மதிப்பில் உதவித்தொகை, தொழிலாளர் நலத்துறை சார்பில் 804 நலவாரிய உறுப்பினர்களுக்கு 8.33 லட்சம் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 40 நபர்களுக்கு 2 லட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், நான்கு பேருக்கு 2.73 லட்சம் மதிப்பிலான தாலிக்கு தங்கம், பட்டு வளர்ச்சித் துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு 4.20 லட்சம் மதிப்பில் பட்டு விவசாயிகளுக்கு நவீன புழு வளர்ப்புத் தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் என மொத்தம் 2.3 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை 2,424 பயனாளிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் வழங்கினர். 



கூட்டத்தில் உரையாற்றிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,


தமிழக அரசு சார்பில் முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ’மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டம் பெரிய வரலாறு படைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 50,000 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். கொரோனா பெருதொற்று ஊரடங்கு காலத்தில் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் அதிக அளவில் இறந்துள்ளனர். எனவே, இதை கருத்தில் கொண்டு பொது முடக்க காலத்தில் இந்த சிறப்பு வாய்ந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடி பயனாளிகளுக்கு கொண்டு சேர்ப்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்றார்.  




மேலும், பெருந்தொற்று காலத்தில் பொதுமக்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என பேசிய அவர், மேடையிலிருந்து பயனாகளில் ஒருவர் முக கவசம் சரியாக அணியாமல் இருந்ததை சுட்டிக்காட்டி, முக கவசத்தை மூக்கு மற்றும் வாய் பகுதியை முழுமையாக மறைக்கும் வகையில் அணிய வேண்டும் என அறிவுரை கூறினார்.