TN Transport Employees: போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக, தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


போக்குவரத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை:


தமிழ்நாடு தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகத்தினருடன், நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த  தொழிலாளர் நலத் துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இப்பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்திலுள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள், போக்குவரத்துக் கழகங்களின் இயக்குநர்கள், போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் நாளை முதல் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அண்ணா தொழிற்சங்கமும், அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சிஐடியு-ம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


6 அம்ச கோரிக்கைகள்:


சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தனர். அதன்படி, அரசு போக்குவரத்துத் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கவேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எதுவும் எட்டப்படவில்லை.


வேலைநிறுத்தம்:


கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சாலையில்  இறங்கியும், பணிமனைகளை முற்றுகையிட்டும் தர்ணாவில் ஈடுபட்டனர். அதேநேரம், தற்காலிக ஊழியர்களை கொண்டு பல இடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் ஒரு சில இடங்களில் சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால், பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். அதோடு, திட்டமிட்டபடி முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியுமா எனவும் குழம்பி தவித்தனர்.


நீதிமன்ற உத்தரவும் - போராட்டம் வாபஸும்:


போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, பண்டிகை காலங்களில் பொதுமக்களை சிரமப்படுத்தும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் வலியுறுத்தியது. இதையேற்ற போக்குவரத்து சங்கத்தினர், பொதுமக்கள் நலன் கருதி ஜனவரி 19ம் தேதி வரை வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள், போக்குவரத்துக் கழகங்களின் இயக்குநர்கள், போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.