பிரபல பரதநாட்டியக் கலைஞரும், கலைமாமணி விருது வென்றவருமான ஜாகிர் உசேனுக்கு, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ஒரு வன்முறை என்று பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 


பிறப்பால் இஸ்லாமியரான ஜாகிர் உசேன், பரதநாட்டியம் மீதான ஈர்ப்பு காரணமாக, குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறியவர். குருகுல முறையில் தங்கி, பரதம் பயின்று வைணவத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல்வேறு இடங்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். ஜாகிரின் பரதநாட்டியப் பங்களிப்பைப் பாராட்டி அவருக்குத் தமிழ்நாடு அரசின் கலைமாணி விருது வழங்கப்பட்டுள்ளது. அதையும் திருச்சேறை சாரநாதப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தவர் ஜாகிர்.


தமிழகம், திருப்பதியில் உள்ள பல்வேறு வைணவ திவ்யத் தலங்களுக்குத் தனிப்பட்ட வகையிலும் நண்பர்களின் உதவியுடனும் பல்வேறு பொருட்களை வழங்கியுள்ளார். 


இதற்கிடையே திருச்சி சென்ற ஜாகிர் உசேனுக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலுக்குள் நுழைய நேற்று (டிச.10) மதியம் அனுமதி மறுக்கப்பட்டது. ரங்கராஜன் என்னும் நபர், தன்னை மதத்தின் பெயரால் மோசமாகத் திட்டியதாகவும் கோயில் வாசல் வரை நெட்டித் தள்ளியதாகவும் ஜாகிர் வேதனை தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு பலமுறை கோயிலுக்குச் சென்றுள்ளதாகவும் கோயில் நிர்வாகத்தின் சார்பிலேயே நடன நிகழ்ச்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 




இதுபற்றிப் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு கூறும்போது, ''முஸ்லிம் மதத்தவராக இருப்பதால் அவர் கடவுளை வணங்கக்கூடாது என்று எதுவும் கிடையாது. யாருக்கெல்லாம் நம்பிக்கை உள்ளதோ, அவர்கள் அனைவரும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம்'' என்று தெரிவித்த நிலையில், ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒரு வன்முறை என்று பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 


முஸ்லிமாக இருப்பதால் பெருமாளை வணங்கக்கூடாதா?- ஜாகிர் உசேனுக்கு கவிதா ராமு ஐஏஎஸ் ஆதரவு


இதுகுறித்து அவர் 'ஏபிபி' செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''ஜாகிர் உசேன் உட்பட யாரையுமே இப்படி கோயிலில் இருந்து வெளியேற்றுவது அடிப்படை இங்கிதம் இல்லாத, மனிதத்தன்மை அற்ற செயல். பெருமாளைச் சேவிக்க வந்தவரை வெளியேற்றிய சம்பவம் ஒரு வன்முறை. இதற்கு யாரும் எந்த விளக்கமும் கொடுக்க முடியாது. இத்தகைய சம்பவங்களை நாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. 


சம்பந்தப்பட்ட நபர் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். கோயிலுக்குள் வரும் பக்தர்களை இவ்வாறு நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது. இஸ்லாமியரை அனுமதிக்க மறுத்த அதே ஸ்ரீரங்கம் கோயிலில்தான் துலுக்க நாச்சியாருக்கு சன்னிதியே உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை விதிகளை நான் ஏற்கத் தயாராக இல்லை. 


இந்து மதம் அனைவருக்கும் சொந்தம் என்று கூறுகிறோமே? இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்புப் பலகையே தமிழ்நாட்டில் எங்குமே இருக்கக்கூடாது. மாற்று மதத்தவரை இந்து கோயில்களுக்குள் அனுமதித்தால் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது? வெளிநாட்டவர்களை மட்டும் அனுமதிக்கிறோமே? தேவாலயங்களுக்குள் எல்லோரும் செல்ல முடிகிறதே? ஏன் வெளிநாடுகளில் மசூதிக்குள்ளும் மாற்று மதத்தவர்கள் செல்கிறார்கள்.


இந்து மதத்தில் உள்ள அனைவருக்கும் உண்மையான பக்தி உள்ளதா? என்னைப் பொறுத்தவரை 3 வழிபாட்டுத் தலங்களிலுமே அனைத்து மதத்தவரும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்'' என்று டி.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.