பிரபல பரதநாட்டியக் கலைஞரும், கலைமாமணி விருது வென்றவருமான ஜாகிர் உசேனுக்கு, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், முஸ்லிம் மதத்தவராக இருப்பதால் அவர் கடவுளை வணங்கக்கூடாது என்று எதுவும் கிடையாது. யாருக்கெல்லாம் நம்பிக்கை உள்ளதோ, அவர்கள் அனைவரும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம் என்று கவிதா ராமு ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.


பிறப்பால் இஸ்லாமியரான ஜாகிர் உசேன், பரதநாட்டியம் மீதான் ஈர்ப்பு காரணமாக, குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறியவர். குருகுல முறையில் தங்கி, பரதம் பயின்று வைணவத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல்வேறு இடங்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். ஜாகிரின் பரதநாட்டியப் பங்களிப்பைப் பாராட்டி அவருக்குத் தமிழ்நாடு அரசின் கலைமாணி விருது வழங்கப்பட்டுள்ளது. அதையும் திருச்சேறை சாரநாதப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தவர் ஜாகிர்.



தமிழகம், திருப்பதியில் உள்ள பல்வேறு வைணவ திவ்யத் தலங்களுக்குத் தனிப்பட்ட வகையிலும் நண்பர்களின் உதவியுடனும் பல்வேறு பொருட்களை வழங்கியுள்ளார். 


இதற்கிடையே திருச்சி சென்ற ஜாகிர் உசேனுக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலுக்குள் நுழைய நேற்று (டிச.10) மதியம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரங்கராஜன் என்னும் நபர், தன்னை மதத்தின் பெயரால் மோசமாகத் திட்டியதாகவும் கோயில் வாசல் வரை நெட்டித் தள்ளியதாகவும் ஜாகிர் வேதனை தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு பலமுறை கோயிலுக்குச் சென்றுள்ளதாகவும் கோயில் நிர்வாகத்தின் சார்பிலேயே நடன நிகழ்ச்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 


இதுதொடர்பாக நடனக்கலைஞர் ஜாகீர் உசேன் மேலும் கூறும்போது, ''விவரம் அறிந்த நாள் முதலாய், அரங்கனின் திருமுற்றம் என் தாய்வீடு போல... எனக்கு நேர்ந்தது இனி எந்த ஒரு உயிரினத்திற்கும் நேரக் கூடாது. 


அரங்கன் அனைத்தும் அறிவான். எனக்கு மன அழுத்தத்தால் ஏதேனும் நிகழ்ந்தால், அதற்கு என்னைத் திருவரங்கத்தை விட்டு வெளியேற்றியவனே பொறுப்பு'' என்று தெரிவித்திருந்தார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் காரணமாக ஜாகிர், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் இதுகுறித்துப் புதுக்கோட்டை ஆட்சியரும் பரதநாட்டியக் கலைஞருமான கவிதா ராமு கருத்துத் தெரிவித்துள்ளார். ஏபிபி செய்தி நிறுவனத்திடம் அவர் பேசும்போது, ''எனக்கு ஜாகிர் அண்ணனை 25 ஆண்டுகளாகத் தெரியும். அவர் வைணவ சமயத்தின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் நன்றாக அறிவேன். நாலாயிர திவ்ய பிரபந்த வரிகளின் அர்த்தத்தை அவரிடம் இருந்து நிறையக் கற்றிருக்கிறேன். வைணவ சமயம் குறித்த ஏராளமான பொழிப்புரைகள், கதாகாலாட்சேபங்களை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். 




ஜாகிர் அண்ணனுக்குப் பெருமாள் மீது அதீத பக்தி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் அவர் அடிக்கடி செல்வார். செல்லும்போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாலை, ஆண்டாள் கிளி ஆகியவற்றை அவர் கொண்டு வந்து தருவார். அங்குள்ள பக்தர்களிடம் மிகுந்த அன்புடன் இருப்பார். 


அவர் முஸ்லிம் மதத்தவராக இருப்பதால் அவர் கடவுளை வணங்கக்கூடாது என்று எதுவும் கிடையாது. யாருக்கெல்லாம் நம்பிக்கை உள்ளதோ, அவர்கள் அனைவரும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம்'' என்று கவிதா ராமு தெரிவித்தார்.