இன்று தமிழகத்தின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்றிருக்கும் சைலேந்திர பாபு, கடந்த காலங்களில் தான் வகித்த பொறுப்புகளில் பதித்த முத்திரைகளை பார்க்கலாம்.


தனது 25 வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான சைலேந்திர பாபு, கடந்த 1989 ஆம் ஆண்டு ஈரோடு கோபி செட்டி பாளையத்தில் உதவி எஸ்.பி.யாக தனது பயணத்தை தொடங்கினார். அந்தப் பயணம் இன்று அவரை தமிழக டிஜிபியாக உருமாற்றியிருக்கிறது. எப்போதும் எதுகை மோனையில் பேசும் சைலேந்திர பாபு, இன்று டிஜிபியாக பொறுப்பெற்ற பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கொஞ்சம் நிதானித்து “மனித உரிமைகளை மதித்து நடந்து கொள்ள காவலர்களுக்கு  பயிற்சி அளிக்கப்படும் என்றும்  என்னுடைய நடவடிக்கைகள் வரும் காலத்தில் பேசும்” என்று கூறினார்.




தனக்கு கொடுக்கப்படும் பதவி அதிகாரம் மிக்கதோ இல்லையோ, அதில் தனது முத்திரையை அழுத்தமாக பதிப்பதுதான் சைலேந்திர பாபுவின் ஸ்டைல். அந்த வகையில் கடந்த காலங்களில் சைலேந்திர பாபு தான் வகித்த பொறுப்புகளில் பதித்த முத்திரைகள் ஏராளம்.


1992 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட எஸ்.பியாக பணியாற்றிய போது, வெடிகுண்டு நாகராஜன் திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் உள்ள குளத்தூர் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக சைலேந்திர பாபுக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து அங்கு தனி ஆளாக விரைந்தார் சைலேந்திர பாபு. நாகராஜன் பதுங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த சைலேந்திர பாபுவின் மீது நாகராஜன் வெடிகுண்டுகளை வீச, அதனை லாவகமாக கையாண்ட சைலேந்திர பாபு நாகராஜனை என் கவுண்டர் செய்தார்.




செங்கல் பட்டு கிழக்கு மாவட்ட எஸ்.பியாக சைலேந்திர பாபு பதவி வகித்த போது, ஆந்திர கொள்ளையன் கெண்ட கிருஷ்ணய்யாவை அவரது இருப்பிடத்திற்கே சென்று என்கவுண்டர் செய்ய நடவடிக்கை எடுத்தார். இவரது அதிரடி நடவடிக்கையில் நிலை குலைந்து போன கிருஷ்ணய்யா இனி நான் தமிழகம் பக்கமே வர மாட்டேன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்.


1997 ஆம் ஆண்டு சிவகங்கை பகுதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடி கொண்டிருக்க, பயணிகள் பேருந்து ஒன்று கண்மாய்க்குள் பாய்ந்து நீரில் மூழ்கியது. அப்போது பணி நிமித்தமாக அவ்வழியாக சென்று கொண்டிருந்த சைலேந்திர பாபு, நீருக்குள் குதித்து பயணிகளை 16 பேரை  காப்பாற்றினார். அதில் சில பயணிகள் உயிரிழந்தும் போனார்கள். 





கோவை மாநகர ஆணையராக பணியாற்றிய போது ஜவுளிக்கடை நிறுவனர் ரஞ்சித் குமார் ஜெயின் மற்றும் சங்கீதா தம்பதியின் முஸ்கின் ஜெயின் என்ற 11 வயது மகளும் ரித்திக் ஜெயின் என்ற 8 வயது மகனும், அவர்களை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் ஒட்டுநர் மோகன் ராஜ்ஜால் கடத்திச் செல்லப்பட்டனர். விசாரணையில், மோகன் ராஜ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது மட்டுமல்லாமல் தொடர்ந்து ரித்திக்கை கொன்றதும் தெரியவந்தது. 


இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்து, ஒரு புறம் மக்கள் கொந்தளிக்க, அதிரடியாக மோகன்ராஜ்ஜை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றார் சைலேந்திர பாபு. மோகன் ராஜ்ஜின் கூட்டாளி மனோகரனுக்கு காவல்துறை தூக்குத்தண்டனை வாங்கிக் கொடுத்த நிலையில், குடியரசு தலைவரிடம் கருணை மனு அளித்து சிறைதண்டனை அனுபவித்து வருகிறார் மனோகரன்.இந்தச் சம்பத்தில் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி சமர்பித்ததில் சைலேந்திர பாபுவின் பங்கு மிக முக்கியமானது. இந்தச் சம்பவத்தின் மூலம் கோவை மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார் சைலேந்திர பாபு.




கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை 100 ஆண்டுகளில் காணாத பெருமழையை சந்தித்தது. கிட்டத்தட்ட 450 மிமீ மேல் மழை பதிவானது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வேறு வழியே இல்லாமல் தண்ணீரை திறந்து விட வேண்டிய நெருக்கடியான நிலை உருவானது.


ஒரு பக்கம் வெள்ளம், இன்னொருபக்கம் ஏரி தண்ணீர் என பெருக்கெடுத்த வெள்ளத்ததால் தாம்பரம், ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. போர் கால அடிப்படையில் அரசு ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அப்போது கடலோர கூடுதல் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு தனது குழுவினர் மற்றும் மீனவர்களின் உதவியுடன் தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் மிதகு படகுகளுடன் களமிறங்கி உணவுக்காக ஏங்கிக்கொண்டிருந்த மக்களை மீட்டார்.




ரயில்வே காவல்துறை உயர் அதிகாரியாக இவர் பொறுப்பேற்ற பின்னர், ரயிலில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் புகார்களை முறைப்படி பெற நடவடிக்கை எடுத்தார். இதன் மூலம் ரயிலில் ஏற்படும் குற்றச்சமப்வங்கள் பெருமளவு தடுக்கப்பட்டது. 


34 வருடங்களாக காவல்துறையில் பணியாற்றி சைலேந்திர பாபு வயது என்பது வெறு எண் என்பதற்கு மிகச்சரியான உதாரணம். இயல்பாகவே உடற்பயிற்சியில் பெரும் ஆர்வம் கொண்ட அவர் இருந்து காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 22 பேர் கொண்ட குழுவுடன் சைக்கிள் பயணம் செய்து சாதனை படைத்தார். அதே போல  தலைமன்னார் முதல் தனுஷ் கோடிவரை வரையிலான 28 கிமீ தூரத்தை காவல் குழுவினருடன் இணைந்து நீந்தியும் சாதனை படைத்திருக்கிறார். கடந்த காலங்களில் தான் வகித்த பொறுப்புகளில் தனி முத்திரை பதித்த சைலேந்திர பாபு  தமிழக டிஜிபியாகவும் முத்திரைகளை பதிப்பார் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.