பிரபல இந்து மத சாமியாரும் கைலாசா நாட்டைத் தோற்றுவித்ததாகக் கூறிக் கொள்பவருமான நித்தியானந்தா மரணம் அடைந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் இந்த தகவலை ஆன்மிக சொற்பொழிவு வீடியோவில் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த நித்தியானந்தா?
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா பிரபல வார இதழில், ஆன்மிகத் தொடரை எழுதியதன் மூலம் பிரபலமானர். ஆங்கிலத்திலும் தமிழிலும் வசீகரிக்கும் வகையில் இருந்த அவரின் பேச்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பெருகினர்.
தொடர்ந்து கர்நாடக மாநிலம், பிடதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை அமைத்தார். இதற்கிடையே பிரபல நடிகை ஒருவருடன் அவர் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண் சீடர்களைத் தவறாக வழிநடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பெங்களூருவில் அவர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவு ஆன நித்தியானந்தா
போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர் தலைமறைவு ஆனார். எனினும் தனது சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் சமூக வலைதளங்கள் மூலம் அப்டேட் அளித்து வந்தார்.
தொடர்ந்து கைலாசா என்னும் ஒரு நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் விரும்புவோர் கைலாசாவின் குடிமகன் ஆகலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நாடு எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. எனினும் கைலாசாவுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், பணம் ஆகியவற்றை உருவாக்கி நித்தியானந்தா வெளியிட்டார்.
டயாலிசிஸ் சிகிச்சை, கோமா
இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்டது. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கோமாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. எனினும் அதில் உண்மையில்லை என்று நித்தியானந்தாவே வீடியோவில் தோன்றிப் பேசினார்.
இந்நிலையில், நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், கைலாசாவில் இருந்து யாரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தவோ, ஆட்சேபிக்கவோ இல்லை.
சகோதரி மகன் வெளியிட்ட வீடியோ
இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்துவிட்டதாக நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், ஆன்மிக சொற்பொழிவு வீடியோவில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், முன்பு போன்றே நித்தியானந்தா வெளியுலகுக்குத் தோன்றி இத்தகவல் உண்மையில்லை என அறிவிக்க வேண்டும் என்று அவரின் சீடர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.