ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் சூர்யா, மணிகண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் படத்தையும், படத்தில் பணியாற்றியவர்களையும் பாராட்டினர்.
இதற்கிடையே படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற காலண்டர் மூலம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாகவும் , வில்லனாக வரும் போலிஸ் அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என வைக்கப்பட்டிருந்ததும் சர்ச்சையாக வெடித்தது.இதனையடுத்து காலண்டரில் உள்ள புகைப்படத்தை மாற்றி வெளியிட்டனர் படக்குழு. ஆனாலும் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. கடலூர் மாவட்டத்தில் உள்ள சூர்யாவின் ரசிகர்கள் சூர்யா ரசிகர் மன்றத்தை கலைத்து, அவரது உருவ படத்தை எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியர்களை இழிவுபடுத்துவதாக ஜெய் பீம் படத்தை எடுத்திருப்பதற்கு சூர்யா மற்றும் இயக்குநர் ஜானவேல்பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் சூர்யா ரசிகர்கள் பா.ம.க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அக்கட்சியில் இணைந்துள்ளனர். அதேபோல ஈரோடு மாவட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன் முன்னிலையில் சூர்யாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய திருமுருகன் ”வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்ற வார்த்தையை சொல்லவில்லை என்றால் அவர் தம்பி படமாக இருந்தாலும் , அப்பன் படமாக இருந்தாலும் ஈரோட்டில் திரையிடமாட்டோம். அப்படி ஒரு காட்சி திரையிடப்பட்டால் நான் வன்னியர் சங்க செயலாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன் ..6 மாதம் ஆனால் மறந்துவிடுவோம் என நினைக்க வேண்டாம் “ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், நடிகர் சூர்யா பதில் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதேபொல "நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.தொடர்ந்து பேசிய அவர், “ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய சூர்யாவை இந்த பகுதியில் (மயிலாடுதுறையில்) நடமாடவிட மாட்டோம். இந்த பகுதியில் எந்த தியேட்டரிலும் அவரது படத்தை திரையிட விடமாட்டோம். இது தமிழ்நாட்டின் அனைத்து இடங்களில் நடைபெறும். இனி சூர்யா வான் மார்க்கமாகதான் தமிழ்நாட்டினுள் சுற்ற வேண்டும். தரை மார்க்கமாக போக முடியாது என்பதை எச்சரிக்கையாக சொல்லி கொள்கிறோம்”. பாமக மாவட்ட செயலாளரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.