மக்களவைத் தேர்தலில், இதுவரை நடைபெற்ற 5 கட்ட தேர்தலில் பதிவாகியுள்ள முழு விவரங்களையும் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்.
முழு விவரங்கள் வெளியிட கோரி வழக்கு:
இந்தியாவில் 18வது மக்களவைக்கான தேர்தலானது நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 5 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. இன்று 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாநிலங்கள், தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள், பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை, வாக்கு சதவிகிதம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய படிவம் 17-C இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஏன் வழக்கு தொடரப்பட்டது என்றால் ?, வாக்கு சதவீதம் குறித்த சர்ச்சை எழுந்த காரணத்தால்தான், அதாவது வாக்குப்பதிவு நாளில், வாக்கு சதவீதம் குறித்தான தகவல் வெளிவரும், ஆனால், அன்றைய தினத்தின் முழுமையான வாக்குப்பதிவான ஒரு நாள் கழித்தோ, 2 கழித்தோ வெளிவந்தது. இது குறித்து பலரும் சந்தேகத்தை எழுப்பினர். இதையடுத்து படிவம் 17c குறித்த விவரங்களை வெளியிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
படிவம் 17-C:
படிவம் 17 - சி என்பது, வாக்கு மையத்தில், வாக்களிக்க தகுதி உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, வாக்களித்தவர்களின் எண்ணிக்கை, வாக்கு இயந்திரத்தின் எண், வாக்கு இயந்திரத்தில் சோதனை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய படிவமாகும்
விவரங்கள் வெளியீடு:
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இதுவரை 5 கட்ட தேர்தல் வரை நடைபெற்ற வாக்குப்பதிவின் முழு விவரங்களையும் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம் .
மொத்த வாக்காளர்கள் மற்றும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, வாக்கு சதவீதம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணைய செயலியில் 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பான விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் முழு விவரங்களை வெளியிட்டது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளன்று, வேட்பாளர்களின் முகவர்கள், ஒவ்வொரு சுற்று முடிந்த பிறகும் வாக்குப்பதிவு சதவிகிதத்தை சர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிவம் 17C மூலம் அனைத்து வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்களுடன் வாக்குப்பதிவு நாளில் பகிரப்பட்ட வாக்குகளின் தரவை யாராலும் மாற்ற முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.