பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்திருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டில் இருந்து மத்தியில் ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2018 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.


உச்ச நீதிமன்ற தீர்ப்பு:


அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தால் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெருமளவு நன்கொடைகள் பெற்றது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை கிடைக்கப் பெற்றது கடும் சர்ச்சைகளை உண்டாக்கியது.


இதனை அடுத்து, தேர்தல் பத்திரங்கள் மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி 2019ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.


இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, “தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருகிறவர்கள் யார்? யார்? என்கிற விவரத்தை அறியக் கூடிய உரிமை பொது மக்களுக்கு கிடையாது.இந்த திட்டத்தில் சட்ட விதிகள் மீறப்படவில்லை” என கூறியிருந்தது.


இந்நிலையில் தேர்தல் பத்திரம் திட்டம் சட்ட விரோதமானது எனக்கூறி ரத்து செய்து அதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில், “தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் சட்டத்துக்கு எதிரான உள்ளது. இதுதொடர்பான விவரங்களை வழங்க முடியாததற்கான உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை.


தேர்தல் பத்திரங்களை வழங்க வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக விதிக்கப்பட்டுள்ள குறைந்தப்பட்ச விதிகள் திருப்திகரமாக இல்லை. பெரிய நிறுவனங்கள் நிதியுதவி அதிகளவில் வழங்கும்போது அதற்கு கைம்மாறு  எதிர்பார்க்க வாய்ப்புள்ளது” என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்


”அனைத்துக் கட்சிகளின் ஜனநாயகத்தை மீட்டெடுத்துள்ளது"


இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் ரத்து தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "தேர்தல் பத்திரங்கள் திட்டம்  அரசியலமைப்பிற்கு முரணானது என்று உச்ச நீதிமன்றமே சரியாக கூறியுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படைத் தன்மையுடன் கூடிய தேர்தல் நடைமுறையை உறுதி செய்யும். அனைத்துக் கட்சிகளின் ஜனநாயகத்தையும் சம நிலையையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீட்டெடுத்துள்ளது.  தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு தேர்தலில் சாமானியர்களின் நம்பிக்கையையும் உறுதி செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.




மேலும் படிக்க


Electoral Bond: அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு! .. தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு