அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக, தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2002 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கு, பின்னர் வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று, பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என கூறி இருவரையும் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இதுவரை மேல்முறையீடு செய்யப்படவில்லை. இதனிடையே சட்டப்பிரிவு 397ன் படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகள் சரியா என்பதை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ஏன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என 17 பக்கங்களில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். மேலும் தான் பார்த்ததிலேயே விசாரணை நடத்தப்பட்ட மோசமான வழக்கு எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தான் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து சொத்துக்குவிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்ததற்கு எதிராக அமைச்சர் பொன்முடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்ததற்கு இடைக்கால தடை கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என கூறிய உச்சநீதிமன்றம், பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் உள்ளதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக தலைமைநீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.