ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதை கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு பேரறிவாளன் உள்பட- 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுதாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து 9 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து, பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கினை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.  பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தமிழ்நாடு அரசின் சார்பில் ராகேஷ் துவிவேதி, மத்திய அரசு சார்பில்  கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை வைத்தனர்.

Continues below advertisement

விசாரணையின் போது, , ``ஆளுநர், குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்து விஷயங்களுக்குப் போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்து வைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம். விடுதலை செய்வதில் யாருக்கு அதிகாரம் என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும். அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கே மிகப் பெரிய பாதகமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராகச் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மேலும், மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது" என்று நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிபப்டையை அழிக்கும் வகையில் உள்ளது. பேரறிவாளன் மனுவை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்ப முடியாது; குடியரசுத் தலைவரை தொடர்புபடுத்தவும் முடியாது; தனக்கான கடமையை செய்யத் தவறியதோடு தேவையில்லாமல் குடியரசுத் தலைவரை இழுத்துவிட்டிருக்கிறார் ஆளுநர்; அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் தருவது ஆளுநரின் வேலை; அதை உடனே செய்யாமல் கிடப்பில் போட்டிருக்கிறார் ஆளுநர்; பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவை ஏற்காமல் மிகப்பெரிய அரசியல் பிழையை ஆளுநர் செய்துவிட்டார் என்று  அரசுத் தரப்பு வழக்கறிஞர் கடுமையான வாதங்களை எடுத்து வைத்திருந்தனர்.

இறுதியாக, அனைத்துத் தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நீதிபதிகள் தீர்ப்பினை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இவ்வழக்கின் மீதான தீர்ப்பினை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான, போபண்ணா, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பினை வழங்கியது.

அதில், சட்டப்பிரிவு 161ன் படி தமிழ்நாடு அமைச்சரவை கூடி முடிவெடுத்தது ஆளுநரின் முடிவுக்குக் கட்டுப்பட்டது தான். அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுத்திருக்கலாம். ஆனால், அதை குடியரசுத்தலைவருக்கு அனுப்பியது அரசியலமைப்புக்கு எதிரானது; அமைச்சரவை எடுத்த முடிவின் மீது வேண்டுமென்றே இரண்டரை ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்தாரோ என்று எண்ணத்தோன்றுகிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

“சிறையில் இருந்தபோது பேரறிவாளன் படித்த பட்டப்படிப்புகள், நன்னடத்தை, அவரது உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தியது ஆகியவற்றை கருத்தில் கொண்டும், ஏற்கனவே மருராம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பின் அடிப்படையில் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டப்பிரிவு 142ன் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இந்த தீர்ப்பினைப் பயன்படுத்தி சிறையில் இருக்கும் மற்ற 6 பேரும் வழக்கு தொடரலாமா என்று பேரறிவாளனின் வழக்கறிஞர் பிரபுவிடம் கேட்டபோது, சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தங்களை மனுதாரராக சேர்த்துக்கொள்ள வலியுறுத்தியிருந்தார். பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வந்ததும் மற்றவர்களும் நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டதாக கூறினார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசே சீராய்வு மனுவை தாக்கல் செய்யவும், ராஜிவ் காந்தியுடன் கொல்லப்பட்ட மற்ற நபர்களின் குடும்பத்தினரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பிருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.