நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கி, அக்கட்சியின் முதல் மாநாடு கடந்த 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் விஜய் பேசியது பெரும் பரபரப்பையும், கவனிப்பையும் தமிழக அரசியலில் ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு குவிந்திருநு்த ரசிகர்களுக்கு நேரில் சென்று வாழ்த்து கூறினார்.
விஜய்க்கு வாழ்த்து கூறிய ரஜினி:
வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் விஜய்யின் தவெக மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றும், அவருக்கு எனது வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு அவரது நிலைப்பாடு, கட்சி கொள்கைகள் பற்றி அறிவிக்காமலே இருந்தார். இதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், நிலைப்பாடு பற்றி த.வெ.க. மாநாட்டில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தவெக மாநாட்டில் தனது கொள்கைகள், செயல்திட்டங்களை அறிவித்த விஜய், பா.ஜ.க. மற்றும் தி.மு.க. தான் தங்களுடைய கருத்து மற்றும் கொள்கை எதிரிகள் என்று அறிவித்தார். மேலும், திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என்று கூறியதுடன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும், தவெக ஆட்சி அமைந்தால் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கும் என்றும் கூறியிருந்தார்.
குஷியில் த.வெ.க. தொண்டர்கள்:
விஜய்யின் பேச்சுக்கு ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு குவிந்திருந்த தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் நடிகர் விஜய்யின் மாநாடு வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறியிருந்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்து த.வெ.க. தொண்டர்களையும், விஜய்யின் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டராக கொடி கட்டிப் பறக்கம் நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017ம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். மேலும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். ஆனால், கட்சியைத் தொடங்காமலே தனது உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் அரசியலில் இருந்து விலகிய பிறகு அண்ணாத்தா, ஜெயிலர், வேட்டையன் படங்கள் வெளியாகியது. தற்போது அவரது நடிப்பில் கூலி படம் உருவாகி வருகிறது.
ரஜினிகாந்த் அரசியலின் கருத்துக்களும், ஆதரவும் ஒவ்வொரு முறையம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இணையத்தில் ரஜினி - விஜய் ரசிகர்கள் மோதி வரும் சூழலில் விஜய்க்கு ரஜினி வாழ்த்து கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு நடிப்பில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய் நடிப்பில் தற்போது அவரது கடைசிப் படமாக எச்.வினோத் இயக்கத்தில் தளபதி 69 உருவாகி வருகிறது.