தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மட்டுமே வெயில் அடித்து வருகிறது. தென் மாவட்டங்கள், கொங்கு மண்டலம், உள் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.



10 மணி வரை மழை:


தொடர்ந்து வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று சென்னை உள்பட பல பகுதிகளில் திடீரென கன மழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று காலை 10 மணிக்குள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






அதேபோல, கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று திடீரென மதியம் கொட்டித் தீர்த்த மழையால் சாலையின் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.


மதுரையில் வடியாத மழைநீர்:


பொதுமக்கள் காலை முதல் புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடி வரும் சூழலில், மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நேற்று பெய்த கனமழையால் மீண்டும் பல பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது. இது பொதுமக்கள் மத்தியில் அவதியை ஏற்படுத்தியுள்ளது.


இன்று தீபாவளி கொண்டாடப்படும் சூழலில் மதுரையில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மழைநீர் சூழ்ந்திருப்பதால் அவர்கள் தீபாவளியை கொண்டாட முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.