கரூர் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை


 




 



கரூர் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.


கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கரூர் மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்யவும், பொது அமைதியை நிலை நாட்டவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒன்பதாம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ரவுடி வேட்டையில் மொத்தம் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 24 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 91 ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.


 




 


மேலும் குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பிடி கட்டளை நிலுவையில் இருந்த ஒரு ரவுடி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது ரவுடிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க 11 ரவுடிகள் மீது நன்னடத்தை பிணை ஆணை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு நன்னடத்தை பிணை ஆணை பெறப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு ரவுடிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் நடமாட்டங்கள் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகளில் விரைந்து தண்டனை பெறுவதற்கு சிறப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


 




 


மேலும், பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்துதல், கட்டப்பஞ்சாயத்து, வியாபாரிகளிடம் மாமுல் கேட்டு மிரட்டுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.