கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை பெய்த நிலையில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளிலேயே நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக கரூரில் 110.30 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வெயில் கொடுமையால் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, கரூரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கரூர் மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கரூர் மாவட்டம், மாயனூர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின்போது, வானில் இருந்து ஐஸ் கட்டிகள் கீழே விழும் காட்சிகளை பொதுமக்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
தற்போது அந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. கத்திரி வெயில் நேற்று தொடங்கிய நிலையில் கரூர் மாவட்டத்தில் இன்று பெய்த கனமழையின் காரணமாக வெப்பம் குறைந்து, சற்று மிதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.