தஞ்சாவூர் ஒன்றியத்தில் ஆவின் தயிர் விற்பனை விலையை உயர்த்துவது தொடர்பாக பால் முகவர்களுக்கு எந்த ஒரு முறையான முன்னறிவிப்போ, சுற்றறிக்கையோ கொடுக்காமல் நேற்று (07.08.2023) முதல் தயிருக்கான விற்பனை விலையை 60.00 ரூபாயில் (500கிராம் 30.00ரூபாய்) இருந்து 70.00 ரூபாயாக (500கிராம் 35.00ரூபாய்) மாற்றியமைத்து ஒரு கிலோவுக்கு 10.00 ரூபாய் விற்பனை விலையை நேரடியாக உயர்த்தியுள்ளது.


அதுமட்டுமின்றி நேற்று (07.08.2023) முன்தினம் வரை 10.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 170 கிராம் தயிர் பாக்கெட்டின் அளவை 100 கிராம் ஆக்கி அதில் 70 கிராம் அளவை குறைத்து, அதே 10.00ரூபாய்க்கு விற்பனை விலையாக நிர்ணயம் செய்து (ஒரு கிலோவுக்கு சுமார் 40.00ரூபாய் விலை உயர்வு) பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் மறைமுகமாகவும் விற்பனை விலை உயர்வை சுமத்தியுள்ள தஞ்சை ஒன்றிய ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, பால் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்கப்படாத சூழலில் மறைமுகமாகவும், நேரடியாகவும் உயர்த்தப்பட்டுள்ள விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.




மேலும், ஆவின் நிறுவனம் கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்து அதற்கான அரசாணை முறையாக வெளியிடப்பட்டு அமுல்படுத்தப்படும். இந்த சூழலில் மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கான அதிகாரம் தங்களுக்கு இருப்பதைப் போல எண்ணிக் கொண்டு தன்னிச்சையாக முடிவெடுத்து, ஆவின் பாலில் கொழுப்பு சத்து அளவையும், தயிர் பாக்கெட்டுகளின் எடை அளவையும் குறைத்து மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்துவது, தயிர் பாக்கெட்டுகளின் விற்பனை விலையை எந்த விதமான முன்னறிவிப்பும் வழங்காமல் உயர்த்துவது என சர்வாதிகார போக்கோடு நடந்து கொள்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளதாக அச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.


ஆனால் இதனையெல்லாம் கண்காணித்து, மாவட்ட ஒன்றியங்களின் பொதுமேலாளர்களுடைய சர்வாதிகாரப் போக்கினை தடுத்து நிறுத்த வேண்டிய நிர்வாக இயக்குனர்களோ, பால்வளத்துறை அமைச்சர்களோ  அமைதியாக கண்டு கொள்ளாமல் இருப்பதை காணும் போது அவர்களுடைய கஜானாவுக்கு சேர்க்க வேண்டியதை மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர்கள் கொண்டு போய் சேர்த்து விடுகிறார்கள் என்பதால் அவர்களின் ஆசியோடு தான் இந்த மறைமுக விற்பனை விலை உயர்வு நடைபெறுகிறதோ என பால் முகவர்கள் சங்கம் விமர்சனம் செய்துள்ளது.


தற்போதைய ஆட்சி பொறுப்பேற்று மூன்றாவது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் பலமுறை விற்பனை விலை உயர்த்தப்பட்ட போதும் கூட தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை கிள்ளி கொடுத்து விட்டு அவர்களின் கோரிக்கையை இன்னும் பரிசீலித்துக்கொண்டே இருப்பதாக பால் உற்பத்தியாளர்களுக்கும், பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனைக்கான லாபத் தொகையை உயர்த்தி வழங்குவதாக பால் முகவர்களுக்கும்  ஏமாற்றி வருவதாகவும் பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 


எனவே மக்களுக்கான அரசு இது எனக் கூறும் முதல்வர், அரசின் உத்தரவு இல்லாமல் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உயர்த்தக்கூடாது என்றும் பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தையும், எடையையும் குறைக்கக்கூடாது என்றும் அவ்வாறு அரசின் அனுமதி இன்றி நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். 



இந்தக்குற்றச்சாட்டிற்கு ஆவின் நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை. விளக்கம் வரும் போது, அதனை ஏபிபி நாடு உடனடியாக வெளியிடும் என்பதை இங்கு பதிவு செய்கிறோம்.